தாம்பரத்தில் பட்டபகலில் துணிகரம் ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் 300 பவுன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளை
பட்டபகலில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 300 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்,
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் புளூ ஜாக்கர், பாண்டியன் தெருவை சேர்ந்தவர் ராமன் (வயது 65). பொறியாளரான இவர் பொதுப்பணித்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மகன் உப்பிலி அமெரிக்காவின் சிகாகோ நகரில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 3–ந் தேதி திருமணம் நடந்தது.
மனைவி மற்றும் பெற்றோரை சிகாகோ அழைத்துச் செல்வதற்காக விசா எடுப்பதற்கு அவர்கள் அனைவரும் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு நுங்கம்பாக்கம் சென்றனர். மாலை 4.30 மணியளவில் அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ராமன் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து 300 பவுன் நகைகள், ரூ.10 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ராமன் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீடு முழுவதும் ஆய்வு செய்து கைரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெற்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தாம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.