நீர் தேர்வை ரத்து செய்யக்கோரி வகுப்புகளை புறக்கணித்து 2–வது நாளாக மாணவர்கள் போராட்டம்


நீர் தேர்வை ரத்து செய்யக்கோரி வகுப்புகளை புறக்கணித்து 2–வது நாளாக மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 7 Sept 2017 4:45 AM IST (Updated: 7 Sept 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருப்பூர் சிக்கண்ணாஅரசு கல்லூரி மாணவர்கள் 2–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல எல்.ஆர்.ஜி.மகளிர் கல்லூரி மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ–மாணவிகள், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன் தினம் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக கல்லூரி வகுப்புகள் நேற்று முன் தினம் ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் நுழைவு வாயிலுக்கு வெளியே அமர்ந்து 2–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அது குறித்து தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதே சமயம் வகுப்புகளுக்கு சென்ற மாணவ–மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தினார்கள். அப்போது வெளியில் அமர்ந்திருந்த மாணவர்கள் வகுப்புகளில் உள்ளவர்களையும் வெளியில் அனுப்பி விட்டு கல்லூரிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். அதையடுத்து கல்லூரி முதல்வர் பாக்கியமணி அனைத்து மாணவர்களையும் வகுப்புகளை விட்டு வெளியே செல்லும்படி உத்தரவிட்டார். பின்னர் சுமார் 10.30 மணிக்கு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவ–மாணவிகள் அமைதியாக கலைந்து சென்றனர்.

அதே போல் திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி மாணவிகளும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்தனர் பின்னர் அவர்கள் கல்லூரியின் நுழைவு வாயில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். அப்போது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள். மதியம் 1 மணி வரை போராட்டம் நடத்திய மாணவிகள் பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி பல்லடம் மங்கலம் ரோட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவ–மாணவிகள் கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள ஏஞ்சல் பொறியியல் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் தங்கள் வகுப்புகளுக்கு சென்று விட்டனர்.


Next Story