வங்கி அதிகாரிகள் டிராக்டரை பறிமுதல் செய்ததால் விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை


வங்கி அதிகாரிகள் டிராக்டரை பறிமுதல் செய்ததால் விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 7 Sept 2017 5:00 AM IST (Updated: 7 Sept 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே வங்கி அதிகாரிகள் டிராக்டரை பறிமுதல் செய்ததால் மனமுடைந்த விவசாயி ஒருவர் வி‌ஷம்குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

பொங்கலூர்,

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மலையம்பாளையத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 60) விவசாயி. இவரது மனைவி சுலோச்சனா(55). தனது மனைவியின் பெயரில் விவசாய பணிக்காக மகேந்திரா வங்கியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு டிராக்டர் வாங்க ரூ.7லட்சம் கடனை வெள்ளியங்கிரி பெற்றுள்ளார்.

இந்த கடனுக்கு வட்டியுடன் சேர்த்து 6 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.98 ஆயிரம் தவணை செலுத்த வேண்டும். அதன்படி கடன் வாங்கிய தேதியில் இருந்து 6 மாதம் கழித்து ஒரு தவணையான ரூ.98 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அதன் பிறகு வறட்சி காரணமாக கடனை செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். இதுகுறித்து வங்கியில் இருந்து நினைவூட்டல் கடிதம் வந்துள்ளது.

அதற்கு வெள்ளியங்கிரி தன்னால் தற்போதைக்கு கடனை கட்ட முடியாத நிலையில் இருப்பதாகவும், தவணையை கட்ட கால அவகாசம் தருமாறும் கேட்டுள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் கடனை கட்டாததால் நீதிமன்றம் சென்று கடனுக்காக டிராக்டரை பறிமுதல் செய்ய ஆணை பெற்றனர். அந்த கடிதத்துடன் நேற்றுகாலை பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு வந்த அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் மலையம்பாளையம் சென்று வெள்ளியங்கிரி வீட்டில் நிறுத்தி வைத்திருந்த டிராக்டரை பறிமுதல் செய்து பல்லடம் கொண்டு வந்தனர். பின்னர் உங்களுக்கு ஏதாவது விளக்கம் வேண்டும் என்றால் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு வாருங்கள் என்று தெரிவித்துள்ளனர். டிராக்டரை பறிமுதல் செய்த போது விவசாயி வெள்ளியங்கிரி வெளியே சென்று இருந்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த சிறிது நேரத்தில் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு வெள்ளியங்கிரி வந்துள்ளார். அப்போது போலீஸ் நிலையத்தின் எதிரே வங்கி அதிகாரிகளுடன் விவசாயி வெள்ளியங்கிரி டிராக்டரை பறிமுதல் செய்தது குறித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது வங்கி அதிகாரிகள் நாங்கள் என்ன செய்வது, இது மேல் அதிகாரிகளின் உத்தரவு, நீதிமன்ற ஆணைப்படி நாங்கள் செயல்பட வேண்டியுள்ளது என்று தெரிவிதுள்ளனர்.

இதனால் மனமுடைந்த வெள்ளியங்கிரி ஏற்கனவே கையில் எடுத்து வந்து இருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்துள்ளார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அங்கு வந்த உறவினர்கள் பல்லடம் என்.ஜி.ஆர். ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த விவசாயி வெள்ளியங்கிரி சிகிச்சை பலனின்றி இரவு 9 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வங்கி அதிகாரிகள் டிராக்டரை பறிமுதல் செய்ததால் அவமானத்தில் விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story