நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு முயற்சி செய்வதால் கல்லூரி மாணவ–மாணவிகள் போராட்டத்தை கைவிட வேண்டும்


நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு முயற்சி செய்வதால் கல்லூரி மாணவ–மாணவிகள் போராட்டத்தை கைவிட வேண்டும்
x
தினத்தந்தி 7 Sept 2017 4:45 AM IST (Updated: 7 Sept 2017 1:47 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு முயற்சி செய்து வருவதால் கல்லூரி மாணவ–மாணவிகள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று ஈரோட்டில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

ஈரோடு,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஈரோடு பவளத்தாம்பாளையத்தில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளிக்கூட வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அங்கு அமைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சியை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:–

தமிழக மாணவர்களை சிறந்தவர்களாக உருவாக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் தேர்வு மட்டுமின்றி, உலக அளவில் எந்த தேர்விலும் சாதிக்கும் திறனை வளர்க்கும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாநில பட்டியலில் கல்வி வரவேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கையாகும். ஆனால் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது கல்வியை பொது பட்டியலில் சேர்த்தார். அதேபோல் நீட் தேர்வு தற்போது கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த தேர்வு திடீரென கொண்டு வரப்பட்டதால் மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

நீட் தேர்வு தேவையில்லை என்பதே அ.தி.மு.க.வுக்கும், தமிழக அரசுக்கும் கொள்கையாக உள்ளது. ஆனால் அரசியல் கட்சியினர் தவறாக பிரசாரம் செய்து வருகிறார்கள். குஜராத், மேற்கு வங்காளம், கர்நாடகம், மராட்டியம் ஆகிய வெளிமாநிலங்களிலும் நீட் தேர்வை எதிர்த்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பாராளுமன்ற துணை சபாநாயகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறுகையில், ‘‘நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறது. எனவே கல்லூரி மாணவ–மாணவிகள் தங்களுடைய போராட்டதை கைவிட வேண்டும். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி இயற்றப்பட்ட சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதுவரை தள்ளுபடி செய்யப்படாமல் நிலுவையில் இருக்கிறது’’, என்றார்.

கண்காட்சியில் எம்.ஜி.ஆர். முக்கிய பிரமுகருடன் உள்ள புகைப்படங்கள், காய்கறி, பழங்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலைகள், எம்.ஜி.ஆரின் உருவப்படம் வரையப்பட்ட தர்பூசணிகள், காய்கறிகளால் உருவாக்கப்பட்ட மயில் போன்றன இடம்பெற்றிருந்தன. இதில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், ஓ.எஸ்.மணியன், கடம்பூர்ராஜூ, சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், எஸ்.செல்வகுமார சின்னையன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், வி.பி.சிவசுப்பிரமணி, இ.எம்.ஆர்.ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story