நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் போராட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்,
நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் வலுவடைந்துள்ளது. குறிப்பாக, மாவட்டந்தோறும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நேற்று, திண்டுக்கல் அருகே பழனி ரோட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். முன்னதாக, அனிதாவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இதே போல, பழனி சாலையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியிலும் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர். அவர்களும் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இந்த இரண்டு கல்லூரிகளிலும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ஆறுமுகம், கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சுமார் 2 மணி நேரம் வரை மாணவர்களின் போராட்டம் நீடித்தது. அதன்பிறகு, மீண்டும் அவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.
இதற்கிடையே, திண்டுக்கல் கல்லறை தோட்டம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தொகுதி செயலாளர் சுந்தர் தலைமை தாங்கினார். தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் பழனியை அடுத்துள்ள சுப்பிரமணியா பொறியியல் கல்லூரி மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை வழங்க கோரியும், கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஜல்லிக்கட்டை போல மாணவ, மாணவிகள் தன்னெழுச்சியாக போராடுவதால் திண்டுக்கல் நகரின் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அனுமதியின்றி யாரேனும் போராட்டம் நடத்த முயன்றால், ஆரம்பத்திலேயே கைது செய்து நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.