பழனி அருகே ஆயக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி ஒருவர் கைது
பழனி அருகே ஆயக்குடியில், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பழனி,
ஒட்டன்சத்திரம் தாலுகா அம்பிளிக்கை அருகே உள்ள நவகாணி கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் (வயது 52). இவர் பல்வேறு தனியார் நிறுவனம் மற்றும் அரசு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான ஏஜெண்ட் என்றும், வேலை வாய்ப்பிற்கான விண்ணப்பங்களை தன்னிடம் பெற்று வேலையில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் கூறி வந்துள்ளார். மேலும் ஒரு விண்ணப்பத்தின் விலை ரூபாய் 300 என்றும் கூறி ஆயக்குடியில் அறை எடுத்து தங்கி உள்ளார்.
கடந்த சில நாட்களாக அங்கு தங்கி இருந்த அவரை ஏராளமானோர் வந்து சந்தித்து சென்றனர். அவர்களிடம் விண்ணப்பத்தை விற்பனை செய்ததுடன், தன்னிடம் பணம் கொடுத்தால் தனியார் நிறுவனம் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தர முடியும் என்றும் தெரிவித்துள்ளார். இதையொட்டி வேலை வேண்டும் என்று கூறியவர்களிடம் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கேட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மணிவேலை சந்தித்த, பழனி ஜவகர் நகரை சேர்ந்த வடிவேல் மனைவி சரஸ்வதி என்பவர் மணிவேலின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்துள்ளார். பின்னர் இதுகுறித்து ஆயக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஆயக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து மணிவேலை கைது செய்து அவரிடம் இருந்த விண்ணப்ப படிவங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.
இதில் மணிவேல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இதே போல் மோசடியில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட மணிவேலிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.