பெண்ணாடம் அருகே ரெயில் முன் பாய்ந்து 10–ம் வகுப்பு மாணவர் தற்கொலை


பெண்ணாடம் அருகே ரெயில் முன் பாய்ந்து 10–ம் வகுப்பு மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 7 Sept 2017 4:30 AM IST (Updated: 7 Sept 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே ரெயில் முன் பாய்ந்து 10–ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

பெண்ணாடம்,

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே உள்ள பெறுவரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவருடைய மகன் நிஷாந்த்(வயது 16). இவர் பெண்ணாடத்தில் உள்ள திருவள்ளுவர் மாணவர் விடுதியில் தங்கியிருந்து அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நிஷாந்த் வீட்டுக்கு சென்றான். பின்னர் அவர் நேற்று காலை விடுதிக்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு பஸ்சில் புறப்பட்டார். பெண்ணாடம் பஸ் நிலையம் வந்தவுடன், விடுதிக்கு செல்லாமல் பெண்ணாடம் ரெயில் நிலையத்துக்கு சென்றார். பின்னர் பெண்ணாடம் ரெயில் நிலையம் அருகே உள்ள வெள்ளாற்றங்கரையோரத்தில் நின்று கொண்டிருந்தார்.

மதியம் 12.10 மணியளவில் சென்னையில் இருந்து குருவாயூர் நோக்கி சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு நிஷாந்த் பாய்ந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் ரெயிலை உடனடியாக நிறுத்தினார். இதற்கிடையே நிஷாந்த், கை, கால் துண்டாகி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இதையடுத்து டிரைவர் மற்றும் பயணிகள் நிஷாந்தை மீட்டு ரெயிலில் ஏற்றி அரியலூர் ரெயில் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நிஷாந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

நிஷாந்த் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விருத்தாசலம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story