எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க எடப்பாடி பழனிசாமி அணியினர் எதிர்ப்பு: கலைச்செல்வன் எம்.எல்.ஏ. உருவ பொம்மையை எரித்து போராட்டம்
எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலைச்செல்வன் உருவ பொம்மையை எடப்பாடி பழனிசாமி அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் விருத்தாசலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. (அம்மா) அணி செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் எம்.சி.சம்பத்தை நீக்கியதோடு, அவருக்கு பதிலாக புதிய மாவட்ட செயலாளராக விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வனை நியமனம் செய்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உத்தரவிட்டார்.
ஆனால் இதற்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த அமைச்சர் எம்.சி.சம்பத் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் டி.டி.வி. தினகரன் உருவ பொம்மையை எரித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் புதிதாக மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட கலைச்செல்வன் எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக போலீசாரிடம் அனுமதி பெற்றிருந்தார்.
அதன்படி அவர் நேற்று எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க தன்னுடைய ஆதரவாளர்களுடன் புறப்பட இருந்தார். இதை கேள்விப்பட்டதும், அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக எடப்பாடி பழனிசாமியை அணியை சேர்ந்த அமைச்சர் எம்.சி.சம்பத் ஆதரவாளர்கள் முன்னாள் நகரசபை தலைவர் அருளழகன் தலைமையில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒரு தரப்பினரும், முன்னாள் நகரசபை துணை தலைவர் சந்திரகுமார் தலைமையில் மற்றொரு தரப்பினரும் ஒன்று திரண்டனர். இதனால் அங்கு சட்டம்– ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை உருவானது.
இதைத்தொடர்ந்து விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் தலைமையில் இன்ஸ் பெக்டர்கள் ராஜதாமரைபாண்டியன், ராஜா, ரவிச்சந்திரன் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் எம்.ஜி.ஆர்.சிலை முன்பு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். பின்னர் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை நடக்காமல் இருக்க கலைச்செல்வன் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதன் காரணமாக எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவிக்க கலைச்செல்வன் எம்.எல்.ஏ. வரவில்லை.
இதற்கிடையில் கடலூர் கிழக்கு மாவட்ட பாசறை செயலாளர் ரமேஷ் தலைமையில் அ.தி.மு.க. வினர் விருத்தாசலம் பாலக்கரையில் கலைச்செல்வன் எம்.எல்.ஏ.வின் உருவபொம்மையை எரித்து, அவருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் அங்கு கலைச்செல்வன் எம்.எல்.ஏ.வை மாவட்ட செயலாளராக அறிவித்ததற்கு டி.டி.வி. தினகரனுக்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையை கிழித்து சேதப்படுத்தி விட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் விருத்தாசலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு கலைச்செல்வன் எம்.எல்.ஏ. மாலை அணிவிக்க புதுநகர் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தார். அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த அமைச்சர் எம்.சி.சம்பத் ஆதரவாளரான நகர செயலாளர் குமாரும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி கேட்டார். அவருக்கும் போலீசார் அனுமதி வழங்கினர்.
அதன்படி நேற்று காலை நகர செயலாளர் குமார், முன்னாள் நகரசபை துணை தலைவர் சேவல்குமார், ஒன்றிய செயலாளர் பழனிசாமி, நகர துணை செயலாளர் கந்தன், மாவட்ட பிரதிநிதி வெங்கட்ராமன், முன்னாள் கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் சுற்றுலா மாளிகை முன்பு ஒன்று திரண்டனர்.
இதனால் சட்டம் –ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து 2 தரப்பினருக்கும் போலீசார் அனுமதி மறுத்தனர். இதைத்தொடர்ந்து கலைச்செல்வன் எம்.எல்.ஏ. கடலூர் வரவில்லை. அதன்பிறகு அமைச்சர் எம்.சி.சம்பத் ஆதரவாளர்களும் கலைந்து சென்றனர்.
முன்னதாக எம்.ஜி.ஆர். சிலை அருகில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.