அமைச்சர் சி.வி.சண்முகம் கட்சி பதவி பறிப்பு: டி.டி.வி. தினகரன் உருவபொம்மையை எரித்து அ.தி.மு.க.வினர் போராட்டம்
அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கட்சி பதவியை பறிக்கப்பட்டதை தொடர்ந்து, டி.டி.வி. தினகரன் உருவபொம்மையை எரித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டிவனம்,
விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.(அம்மா) செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் சி.வி.சண்முகத்தை, டி.டி.வி. தினகரன் நீக்கினார். இதனை கண்டித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் டி.டி.வி. தினகரன் உருவப்படம் மற்றும் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.
அந்த வகையில், ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராசேந்திரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் ஜெயபால், தனசேகர், பொன்னுரங்கம், சாமிதுரை, ராஜகோபால், வேலாயுதம், முருகானந்தம், சத்யகாமன், அரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் மேல்மலையனூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி தலைமையில் டி.டி.வி. தினகரன் உருவபொம்மை எரிக்கப்பட்டது. மேல்மலையனூர் கடைவீதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஊராட்சி செயலாளர் பாலா, கிளை செயலாளர்கள் முனியப்பன், துரைக்கண்ணு, விஜயன், முன்னாள் கவுன்சிலர்கள் முகமதுஷபி, சுப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விக்ரவாண்டி பஸ் நிலையம் அருகே நகர செயலாளர் பூர்ணராவ் தலைமையில் அ.தி.மு.க.வினர் டி.டி.வி. தினகரன் உருவபொம்மையை தீவைத்து எரித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் பலராமன், மாவட்ட பேரவை துணை தலைவர் ரமேஷ், மாவட்ட இணை செயலாளர் மலர்விழி, நகர இலக்கிய அணி செயலாளர் கண்ணன், எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி முன்னாள் ஒன்றிய செயலாளர் லட்சுமிநாராயணன், ஜெயலலிதா பேரவை முன்னாள் செயலாளர் பொன்னங்குப்பம் ரவி, கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் அய்யனாரப்பன், வாசுதேவராஜ், அசோக், அவை தலைவர் விஜயகுமார் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதே போல் வல்லத்தில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அண்ணாதுரை தலைமையில் டி.டி.வி. தினகரன் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் விநாயகம், முருகேசன், செந்தாமரைக்கண்ணன், முன்னாள் கவுன்சிலர் ரவி, மருதேரி ஏழுமலை, பள்ளிக்குளம் சேகர், ராஜேந்திரன், சேட்டு, காந்தி, நடராசன், ஏகாம்பரம், கண்ணியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.