‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு: அரசு கலைக்கல்லூரி மாணவ–மாணவிள் உள்ளிருப்பு போராட்டம்
‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவ–மாணவிகள் 2–வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர்,
‘நீட்’ தேர்வால் மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைக்காததால் அரியலூர் மாவட்டம் செந்துறை மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கரூரில் அரசு கலைக்கல்லூரி மாணவ–மாணவிகள் நேற்று முன்தினம் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவி அனிதா சாவிற்கு நீதி கேட்டும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று 2–வது நாளாக கல்லூரியில் மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பகல் 12.30 மணி அளவில் நுழைவு வாயில் அருகே அமர்ந்து ‘நீட்’ தேர்வுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இந்த நிலையில் நுழைவு வாயில் அருகே அமர்ந்து கோஷமிட்டதால் வாசலில் வழி விட்டு அமர்ந்து போராட்டம் நடத்தும்படியும் இல்லையெனில் வெளியே சென்று போராட்டம் நடத்தும்படியும் கல்லூரி பேராசிரியர்கள் கூறினர். இதனால் மாணவ–மாணவிகள் கல்லூரிக்கு வெளியே நின்று போராட்டம் நடத்த வந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மாணவர்களை தடுத்து நிறுத்தி வெளியே போராட்டம் நடத்த அனுமதியில்லை என தெரிவித்தனர். இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அனுமதி மறுத்ததால் மாணவ–மாணவிகள் கல்லூரி வளாகத்தின் உள்ளே தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு புரட்சிகர மாணவர் அணி அமைப்பின் நிர்வாகி சுரேந்தர் தலைமை தாங்கினார்.
இதற்கிடையில் பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் கல்லூரி வளாகத்தில் பேராசிரியர்களையும், முதல்வரையும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கல்லூரியை விட்டு போலீசார் வெளியேறுமாறு மாணவர்கள் கோஷமிட்டனர். இதனால் போலீசார் உடனடியாக கல்லூரியில் இருந்து வெளியேறினர்.
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ–மாணவிகள் ‘நீட்’ தேர்வுக்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் எழுதப்பட்ட வாசகங்களை வைத்திருந்தனர். மாலை 4.30 மணி அளவில் மாணவ–மாணவிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.