மனைவியின் நடத்தை சரியில்லை என்றால் கணவர் ஜீவனாம்சம் கொடுக்க தேவையில்லை


மனைவியின் நடத்தை சரியில்லை என்றால் கணவர் ஜீவனாம்சம் கொடுக்க தேவையில்லை
x
தினத்தந்தி 7 Sept 2017 4:59 AM IST (Updated: 7 Sept 2017 4:58 AM IST)
t-max-icont-min-icon

மனைவியின் நடத்தை சரியில்லை என்றால் கணவர் அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

நாக்பூர்,

பண்டாரா பகுதியை சேர்ந்த தம்பதிகள் பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்து வாழ விரும்புவதாக கூறி விவாகரத்து கேட்டு செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு அவர்களுக்கு விவாகரத்து வழங்கியது.

மேலும் மனைவிக்கு ரூ. 3 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்கக்கோரி உத்தரவிட்டது. இதை எதிர்த்து கணவர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதில் ‘‘மனைவியின் நடத்தை சரியில்லாத காரணத்தாலேயே அவரை பிரிய நேரிட்டது. எனவே அவருக்கு ஜீவனாம்சம் வழங்குவதில் எனக்கு விருப்பமில்லை. எனவே ஜீவனாம்சம் வழங்கும் உத்தரவை ரத்து செய்யவேண்டும்’’ என்று கூறியருந்தார்.

இந்த வழக்கு மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:–

பொதுவாக குற்ற நடைமுறை சட்டப்பிரிவு 125 விவாகரத்தின் போது பாதிக்கப்படும் மனைவிக்கு கணவர் ஜீவனாம்சம் வழங்குவது கட்டாயமாகும் என்று கூறுகிறது. ஆனால் அதன் 4–ம் உட்பிரிவு மனைவியின் நடத்தை சரியில்லை என்றால் அவருக்கு ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை என்று கூறுகிறது.

அதன்படி வழக்கில் மனைவியின் நடத்தை சரியில்லை என்பது தெரியவருவதால் அவருக்கு கணவர் ஜீவனாம்சம் வழங்கவேண்டிய அவசியம் இல்லை. எனவே கீழ்கோர்ட்டு விதித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிடுகிறோம்.

என்று தங்கள் தீர்ப்பில் கூறினர்.


Next Story