திருப்பதியில் இருந்து சென்னைக்கு காரில் 2 டன் செம்மரக்கட்டைகள் கடத்தல் 2 பேர் கைது
திருப்பதியில் இருந்து சென்னைக்கு காரில் 2 டன் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்துக்கோட்டை,
ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக சென்னைக்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக பொன்னேரி சரக மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் திருமலைகொழுந்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவர், நேற்று அதிகாலையில் ஊத்துக்கோட்டை நகர எல்லையில் போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது ஆந்திராவில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினர். ஆனால் அந்த கார், நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று அந்த காரை மடக்கி பிடித்தனர்.
காரில் சோதனை செய்தபோது, அதில் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்தது தெரிந்தது. காரில் இருந்த 2 டன் எடை உள்ள 2 அடி நீளம் கொண்ட 22 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக அந்த காரில் வந்த செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 34), ராமநாதபுரத்தை சேர்ந்த அபுபக்கர்சித்திக் (34) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த செம்மரக்கட்டைகளை திருப்பதியில் இருந்து சென்னைக்கு கடத்திச்செல்ல முயன்றது தெரிந்தது.