திருவள்ளூரில் மின்வாரிய அலுவலகத்தில் கொள்ளை முயற்சி பணம் இல்லாததால் பொருட்கள் சூறை
திருவள்ளூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளை கும்பல், பணம் இல்லாத ஆத்திரத்தில் அங்கிருந்த பொருட்களை சூறையாடிச்சென்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் ஜெயா நகரில் உதவி மின்வாரிய பொறியாளர் அலுவலகம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல மின்வாரிய அலுவலர்கள் அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று காலை வழக்கம் போல் அலுவலகத்தை திறக்க வந்தனர்.
அப்போது மின்வாரிய அலுவலக கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள பொருட்கள் அனைத்தும் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டு இருந்தது.
பொதுமக்களிடம் இருந்து மின் கட்டணமாக வசூலிக்கப்படும் பணத்தை வைக்கும் பெட்டியும் உடைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் பூட்டை உடைத்து மின்வாரிய அலுவலகத்துக்குள் புகுந்த கொள்ளையர்கள், பணத்தை கொள்ளையடிக்க முயன்று உள்ளனர்.
ஆனால் மின்வாரிய ஊழியர்கள் தினமும் வசூலாகும் பணத்தை அன்றைய தினமே வங்கியில் செலுத்திவிடுவதால் அதில் பணம் எதுவும் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள், மின்வாரிய அலுவலகத்தில் இருந்த பொருட்களை சூறையாடி சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்த புகாரின்பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.