ஆரணி ஆற்றங்கரை ஓரம் பதுக்கிய 800 மணல் மூட்டைகள் பறிமுதல்


ஆரணி ஆற்றங்கரை ஓரம் பதுக்கிய 800 மணல் மூட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Sept 2017 5:19 AM IST (Updated: 7 Sept 2017 5:19 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி ஆற்றங்கரை ஓரம் பதுக்கி வைத்து இருந்த 800 மணல் மூட்டைகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணியில் உள்ள சுப்பிரமணிய நகர் பகுதியில் மர்மநபர்கள் ஆரணி ஆற்றில் இருந்து மணலை திருடி மூட்டையாக கட்டி ஆற்றங்கரை ஓரம் முட்புதரில் பதுக்கி வைத்து இருப்பதாக பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் பொன்னேரி தாசில்தார் சுமதி தலைமையில், துணை தாசில்தார் சீனிவாசன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அங்கு பதுக்கி வைத்து இருந்த சுமார் 700 மணல் மூட்டைகளை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் பொன்னேரியை அடுத்த பெரும்பேடு கிராமத்தில் ஆரணி ஆற்றங்கரை ஓரம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்கு 100–க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகளில் மணலை திருடி, பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். அவைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட 800–க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை பொன்னேரியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த மணல் மூட்டைகள் மழை வெள்ளம் ஏற்படும் காலத்தில் பயன்படுத்தப்படும் அல்லது ஏலம் விடப்படும் என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story