உறவினர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு; கடைக்காரர் கைது
உறவினர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருடியது தொடர்பாக கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ராதா நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 38). லாரி டிரைவர். இவரது மனைவி பரிமளா (33). இவர்கள் இருவரும் திருத்தணியில் நடைபெற்ற பரிமளாவின் அண்ணன் மகள் திருமணத்திற்கு வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.
திருமணம் முடிந்து அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சத்து ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து அவர்கள் பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தனர். சப்–இன்ஸ்பெக்டர் சதாசிவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பரிமளாவின் உறவினரான அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் வினோத் (27) என்பவர் மீது சந்தேகம் எழுந்தது.
வினோத்தை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது அவர் பரிமளா வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து ஆயிரத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.