ஜூகு கட்டிட தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி பலி


ஜூகு கட்டிட தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி பலி
x
தினத்தந்தி 8 Sept 2017 2:51 AM IST (Updated: 8 Sept 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

ஜூகு கட்டிட தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி பலியாகினர். பெண்கள் உள்பட 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை,

மும்பை வில்லேபார்லே, ஜூகு காய்பி ஆஸ்மி பார்க் அருகே பிரார்த்தனா என்ற பெயரில் 13 மாடி கட்டிடம் ஜே.வி.பி.டி. திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வந்தது. கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் அந்த கட்டிடத்தின் தரை தளத்தில் சுமார் 15 தகரத்திலான கொட்டகைகள் அமைத்து வசித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10.15 மணியளவில் கட்டிடத்தில் இருந்து ‘டமார்’ என வெடிகுண்டு வெடித்தது போல பயங்கர சத்தம்கேட்டது. சத்தம்கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வெளியே ஓடிவந்து பார்த்தனர். அப்போது பிரார்த்தனா கட்டிட தரை தளம் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எனினும் அவர்கள் வருவதற்குள் பொதுமக்கள் தீவிபத்தில் சிக்கி காயமடைந்த 10 பேரை மீட்டு அந்தேரி கூப்பர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு 3 வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்புபடையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் காயமடைந்த ஒருவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் சுமார் அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்தநிலையில் தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து நடந்த கட்டிடத்தில் இருந்த 6 பேரை உடல் கருகிய நிலையில் பிணமாக மீட்டனர். பலியானவர்கள் ஆணா? பெண்ணா? என்று கூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு உடல்கள் எரிந்து கரிக்கட்டை ஆகி இருந்தது. இதையடுத்து 6 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக கூப்பர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து கூப்பர் ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறியதாவது:–

6 பேரின் உடலும் முற்றிலும் எரிந்து கருகிய நிலையில் இருப்பதால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை. காயமடைந்த 11 பேரில் 9 பேர் ஆண்கள். 2 பேர் பெண்கள். அனைவருக்கும் 60 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

போலீஸ் விசாரணை

தீயணைப்பு துறையினர் தீ விபத்து நடந்த பகுதியில் இருந்து சேதமடைந்த கியாஸ் சிலிண்டர் மற்றும் ஸ்டவை மீட்டுள்ளனர். எனவே தொழிலாளர்கள் சமையல் செய்தபோது கியாஸ் சிலிண்டர் வெடித்து இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்து குறித்து ஜூகு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story