குமரி மாவட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 3 இடங்களில் சாலைமறியல் 661 பேர் கைது


குமரி மாவட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 3 இடங்களில் சாலைமறியல் 661 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2017 4:30 AM IST (Updated: 8 Sept 2017 3:00 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 661 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், ஊதியக்குழு மாற்றத்தை அமல்படுத்த கேட்டும், ஊதியக்குழு அமல்படுத்துவதற்கு முன் 20 சதவீத இடைக்கால நிவாரணம் 1–1–2016 முதல் உடனடியாக அறிவிக்க கோரியும் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு குழுவான ஜாக்டோ–ஜியோ சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்த கோரிக்கைகள் தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஜாக்டோ–ஜியோ சார்பில் செப்டம்பர் 7–ந்தேதி முதல் (அதாவது நேற்று) தொடர் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி குமரி மாவட்டத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நேற்று பணிக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.

போராட்டத்தில், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, மூட்டா உள்ளிட்ட சுமார் 15 ஆசிரியர் சங்கங்கள் மற்றும் வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் அரசு பணியாளர் சங்கம் உள்ளிட்ட சுமார் 20 அரசு ஊழியர்கள் சங்கங்கள் பங்கேற்றன.

பெரும்பாலான ஆசிரியர்கள் நேற்று பணிக்கு செல்லாததால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடம் நடத்த ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் மாணவ–மாணவிகள் அவதியடைந்தனர்.

 இதுபோல் அரசு ஊழியர்களும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசுத்துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் வருவாய்த்துறை அலுவலகம், வளர்ச்சிப்பிரிவு அலுவலகம் ஆகியவை பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தொடர் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி ஜாக்டோ–ஜியோ சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காலை ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியல் போராட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ–ஜியோ ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மூட்டா அமைப்பின் முன்னாள் மாநில தலைவர் மனோகர் ஜஸ்டஸ் தொடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர்கள் பகவதியப்பபிள்ளை, சந்தரசேகர், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டு கோ‌ஷங்களை எழுப்பினர்.

அதைத் தொடர்ந்து அனைவரும் கலெக்டர் அலுவலகம் முன் உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகம் முன் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் உடனே கைது செய்து பஸ்சில் ஏற்றி அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில்  தங்கவைத்தனர். 62 பெண்கள் உள்பட மொத்தம் 188 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுபோல் தக்கலையிலும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தக்கலை தாலுகா அலுவலகம் முன் திரண்டு திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க தக்கலை ஒன்றிய தலைவர் ஜான்கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.

ஜாக்டோ–ஜியோ அமைப்பை சேர்ந்த திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 208 பேரை தக்கலை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக அவர்கள் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதைப்போன்று குழித்துறையில் உள்ள விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன் கொட்டும் மழையில் ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. பேரூராட்சி ஊழியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். ஜாக்டோ உயர் மட்ட நிர்வாகி பாலச்சந்திரன், குழித்துறை கல்வி மாவட்ட அரசு ஆசிரியர் சங்க தலைவர் பெஞ்சமின் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை தமிழக அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ராஜகுமார் தொடங்கி வைத்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட 265 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

குமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 661 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Related Tags :
Next Story