சக்ரேபையலு வனப்பகுதியில் ‘கும்கி’யை காட்டு யானை தந்தத்தால் குத்திக் கொன்றது
சக்ரேபையலு வனப்பகுதியில் ‘கும்கி‘ யானையும், காட்டு யானையும் பயங்கரமாக மோதிக் கொண்டன.
சிவமொக்கா,
சக்ரேபையலு வனப்பகுதியில் ‘கும்கி‘ யானையும், காட்டு யானையும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த மோதலில் ‘கும்கி‘ யானையை காட்டு யானை தந்தத்தால் குத்திக் கொன்றது.
சிவமொக்கா அருகே ஷெட்டிஹள்ளி பகுதியில் சக்ரேபையலு வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானைகள் பயிற்சி முகாம் உள்ளது. இந்த பயிற்சி முகாமில் ஏராளமான யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல, நியூ டஸ்கர் என்ற 50 வயது ஆண் யானையும் கடந்த 30 ஆண்டுகளாக சக்ரேபையலு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்தது. கும்கி யானையான நியூ டஸ்கர், வனப்பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடிக்க வனத்துறையினருக்கு உதவி வந்தது.இந்த நிலையில் நேற்று முன்தினம் கும்கி யானையான நியூ டஸ்கருக்கும், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு யானைகளும் பயங்கரமாக மோதிக் கொண்டன.
அப்போது காட்டு யானை, தனது தந்தத்தால் நியூ டஸ்கர் யானையின் வயிறு, மார்பு பகுதிகளில் குத்தியது. இதில், நியூ டஸ்கர் யானை ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது. யானைகள் பிளிறும் சத்தம் கேட்டு யானைகள் முகாமில் இருந்த வனத்துறையினர், பாகன்கள் விரைந்து சென்றனர். அப்போது, நியூ டஸ்கர் யானை ரத்தவெள்ளத்தில் செத்து கிடந்தது. காட்டு யானைக்கும், நியூ டஸ்கர் யானைக்கும் இடையே நடந்த மோதலில் காட்டு யானை, நியூ டஸ்கர் யானையை தந்தத்தால் குத்திக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வரவழைக்கப்பட்டனர். கால்நடை மருத்துவர்கள் நியூ டஸ்கர் யானைக்கு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அதேப்பகுதியில் நியூ டஸ்கர் யானை குழிதோண்டி புதைக்கப்பட்டது.காட்டு யானைகளை பிடிக்க நடவடிக்கைஇதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், ‘சக்ரேபையலு யானைகள் முகாமில் இருந்த ரங்கா என்ற யானைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மதம் பிடித்தது. இதனால், அந்த யானை இரும்பு சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டுள்ளது. முதலில் அந்த யானை தான் நியூ டஸ்கர் யானையை குத்தி கொன்றிருக்க வேண்டும் என்று சந்தேகித்தோம். ஆனால், ரங்கா யானை கட்டப்பட்ட இடத்திலேயே நின்றிருந்தது. ரங்கா யானையின் தந்தமும் அவ்வளவு கூர்மையானது கிடையாது.
இதனால், வனப்பகுதியில் இருந்து வந்த பலம்கொண்ட காட்டு யானை தான் நியூ டஸ்கர் யானையை தந்தத்தால் குத்திக் கொன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அந்த யானைகளை பிடித்து கும்கியாக பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும்‘ என்றார்.
நியூ டஸ்கர் யானை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சிவமொக்கா அருகே ஷெட்டிஹள்ளி வனப்பகுதியில் சுற்றித்திரிந்த போது வனத்துறையினர் ‘கும்கி‘கள் உதவியுடன் பிடித்தனர். அப்போது அந்த யானைக்கு 20 வயது இருக்கும். பின்னர், அந்த யானை சக்ரேபையலு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து அந்த யானைக்கு நியூ டஸ்கர் என்று பெயர் சூட்டப்பட்டது. பின்னர் யானைகள் பயிற்சி முகாமில் நியூ டஸ்கர் யானைக்கு ‘கும்கி‘யாக பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த நியூ டஸ்கர் யானை, ‘கும்கி‘யான பிறகு வனப்பகுதியில் இருந்து கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் ஏராளமான யானைகளை பிடிக்க வனத்துறையினருக்கு உதவியுள்ளது. மேலும் ஏராளமான யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கவும் உதவியுள்ளது. இதுதவிர, சிவமொக்காவில் நடக்கும் தசரா விழாவிலும் இந்த யானை பங்கேற்றுள்ளது. சக்ரேபையலு யானைகள் பயிற்சி முகாமில் மூத்த யானையாக இருந்த நியூ டஸ்கர் இறந்துள்ளதால், சக்ரேபையலு யானைகள் பயிற்சி முகாமிற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.