அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மழைநீர் கால்வாய் பணி மந்த கதியில் நடப்பதாக பொதுமக்கள் புகார்
கடந்த 2015–ம் ஆண்டு பெய்த பெரும் மழையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை முழுவதும் மழை வெள்ளத்தில் மூழ்கியது.
அம்பத்தூர்,
இதனால் சிறு, குறு தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
இதையடுத்து அம்பத்தூர் தொழிற்பேட்டையிலும், தொழிற்பேட்டைக்குள் அமைந்து உள்ள காஞ்சனாகுப்பம், மங்களபுரம், பட்டரைவாக்கம் பகுதியில் இருந்து மழைநீரை வெளியேற்ற கால்வாய் அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது.
ஆனால் இந்த பணி மந்த கதியில் நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒரு பகுதி பணி முழுமைபெறுவதற்குள் மற்றொரு பகுதியில் பணி தொடங்குவதால் தொழிற்பேட்டை பகுதிகளில் போக்குவரத்து தடைபடுகிறது. பணி முழுமை பெறாத இடங்களில் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. மழைநீருடன் கழிவுநீரும் சாலையில் தேங்கி உள்ளது.
எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மழை காலத்துக்குள் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.