பண்ருட்டியில் பரபரப்பு அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு மாணவர் மயங்கி விழுந்து சாவு


பண்ருட்டியில் பரபரப்பு அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு மாணவர் மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 9 Sept 2017 5:30 AM IST (Updated: 9 Sept 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு மாணவர் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

பண்ருட்டி,

பண்ருட்டி அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு மாணவர் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து மாணவரின் சாவில் சந்தேகம் உள்ளது என்று கூறி அவருடைய உறவினர்கள் மற்றும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சூரக்குப்பத்தை சேர்ந்தவர் திருமால். இவருடைய மகன் மதிபாண்டியன் (வயது 15). இவர் பண்ருட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் மதிபாண்டியன் பள்ளிக்கு சென்றார். பின்னர் பள்ளியில் நடந்த கணிததேர்வை எழுதிக்கொண்டிருந்தார்.

11 மணி அளவில் தேர்வு எழுதி கொண்டிருந்த மதிபாண்டியன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அப்போது அவருடைய வாயில் இருந்து நுரை தள்ளியது. இதைபார்த்து ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மதிபாண்டியனை ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே மதிபாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன், சப்–இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா மற்றும் போலீசார், இறந்த மதிபாண்டியனின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பள்ளிக்கு சென்று அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் மதிபாண்டியன் சாவு குறித்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே இதுபற்றி தகவல் அறிந்த மதிபாண்டியனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பள்ளிக்கு ஒன்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து பள்ளி முன்பு உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஆசிரியர் அல்லது மாணவர்களில் சிலர் தாக்கியதால் தான் மதிபாண்டியன் இறந்துள்ளார். அவரது சாவில் சந்தேகம் உள்ளது.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினர். இதையறிந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதிபாண்டியன் சாவு குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதைஏற்று அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதிபாண்டியன் உடல்நலக்கோளாறு காரணமாக மயங்கி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story