கற்களை வீசி தாக்கியதில் பெண்ணின் கர்ப்பம் கலைந்தது 3 பேர் கைது
பாபூர் கிராமத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலின்போது கற்களை வீசியதில் எதிர்பாராத விதமாக அந்த கற்கள் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த கர்ப்பிணியை தாக்கியது
சிக்கமகளூரு,
பாபூர் கிராமத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலின்போது கற்களை வீசியதில் எதிர்பாராத விதமாக அந்த கற்கள் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த கர்ப்பிணியை தாக்கியது. இதில் அப்பெண்ணின் கர்ப்பம் கலைந்தது. இதுதொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் தாலுகா பாபூர் கிராமம் போவிகாலனி பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இருதரப்பினர் இடையே முன்விரோதம் காரணமாக கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் கற்களை வீசியும், உருட்டுக்கட்டையாலும் தாக்கிக் கொண்டனர். இந்த சந்தர்ப்பத்தில் அந்த வழியாக அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை கவனிக்காத இருதரப்பினரும் தொடர்ந்து கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக கற்கள் கர்ப்பிணியின் வயிற்றில் தாக்கியது.இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். அதைப்பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் அந்த கர்ப்பிணியை மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அப்பெண்ணின் கர்ப்பம் கலைந்தது. இதனால் அவரும், அவருடைய குடும்பத்தினரும் கதறி அழுதனர்.
இதுகுறித்து ஹிரியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கர்ப்பிணியின் மீது கற்களை வீசியதாக போவிகாலனி பகுதியைச் சேர்ந்த மணி, மஞ்சுநாத், ஹரீஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story