170 பேரிடம் பண மோசடி போலீஸ்காரர் பணி இடைநீக்கம்


170 பேரிடம் பண மோசடி போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 9 Sept 2017 4:42 AM IST (Updated: 9 Sept 2017 4:42 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் பணிக்கான தேர்வு எழுதிய 170 பேரிடம் பண மோசடியில் ஈடுபட்ட போலீஸ்காரரை பணி இடைநீக்கம் செய்து கோலார் தங்கவயல் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

கோலார் தங்கவயல்,

கோலார் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ்காரராக விஜயசிம்மா (வயது 30) பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு (2016) பெங்களூரு புறநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 6 மாதம் பணியாற்றினார். அப்போது போலீஸ் தேர்வு பணியிலும் அவர் ஈடுபட்டு இருந்தார்.

அந்த சமயத்தில் தேர்வு எழுதியவர்களிடம் மருத்துவ பரிசோதனைக்கு ரூ.600 வசூலிப்பதற்கு பதிலாக 170 பேரிடம் தலா ரூ.2 ஆயிரம் வசூலித்து விஜயசிம்மா மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பெங்களூரு புறநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நிர்வாக அதிகாரி சுப்பிரமணி உடந்தையாக இருந்ததாகவும் புகார் கூறப்பட்டது. இதற்கிடையே 6 மாத பணி முடிந்து விஜயசிம்மா மீண்டும் கோலார் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணிக்கு வந்துவிட்டார்.

இதைதொடர்ந்து இதுபற்றி பெங்களூரு புறநகர் போலீஸ் சூப்பிரண்டு அமித்சிங் விசாரணை நடத்தினார். விசாரணையில், விஜயசிம்மா, போலீஸ் பணிக்கு தேர்வு எழுதியவர்களிடம் மருத்துவ பரிசோதனைக்கு ரூ.600–க்கு பதிலாக ரூ.2 ஆயிரம் வசூலித்து மோசடி செய்ததும், இதற்கு சுப்பிரமணி உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சுப்பிரமணி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் விஜயசிம்மாவை பணி இடைநீக்கம் செய்து கோலார் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ் குமார் நேற்று உத்தரவு பிறப்பித்தார். பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள போலீஸ்காரர் விஜயசிம்மா, தன்னை சப்–இன்ஸ்பெக்டர் எனக் கூறி தங்கும் விடுதிகளில் பணம் கொடுக்காமல் தங்கி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story