மைசூருவில், தசரா யானை–குதிரைகளுக்கு பயிற்சி
தசரா ஊர்வலத்தின்போது பீரங்கி குண்டுகள் சத்தத்தை கேட்டு மிரளாமல் இருக்க மைசூருவில் தசரா யானைகள், குதிரைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மைசூரு,
உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 21–ந்தேதி தொடங்கி 30–ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. தசரா விழா தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் மைசூருவில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தசரா விழாவில் கலந்துகொள்வதற்காக பல்வேறு யானைகள் பயிற்சி முகாம்களில் இருந்து 15 யானைகள் மைசூருவுக்கு வந்துள்ளன. அந்த யானைகள் அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன. அந்த யானைகளின் பாகன்களும், அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலத்தில் அர்ஜூனா யானை சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை கம்பீரமாக சுமந்து செல்ல, மற்ற யானைகள் அர்ஜூனா பின்னால் அணிவகுத்து செல்லும். இதனால் தசரா ஊர்வலத்தில் பங்கேற்க மைசூருவுக்கு வந்துள்ள யானைகளுக்கு தினமும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
பீரங்கி குண்டுகள் முழங்க ஜம்பு சவாரி ஊர்வலம் தொடங்கும். மேலும் ஊர்வலத்தின் போது வாணவெடிகள் போடப்படும். இதனால் யானைகள், குதிரைகள் வெடி சத்தத்தை கேட்டு மிரளாமல் இருக்க நேற்று அதற்கு பீரங்கி குண்டுகள் முழங்க பயிற்சி அளிக்கப்பட்டன. நேற்று காலை மைசூரு அரண்மனைக்கு வெளிபுறத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா உள்பட 15 யானைகளும், தசரா ஊர்வலத்தில் பங்கேற்கும் குதிரைகளும் வரிசையாக வந்து நின்றன.அவைகளுக்கு 100 மீட்டருக்கு முன்பாக பீரங்கி குண்டுகள் வெடிக்கப்பட்டன. 3 முறை பீரங்கி குண்டுகள் வெடிக்கப்பட்டன. ஒவ்வொரு முறையும் தலா 3 குண்டுகள் வெடிக்கப்பட்டன. முதல் முறை பீரங்கி குண்டுகள் முழங்கியபோது, தசரா ஊர்வலத்தில் புதிதாக கலந்துகொள்ள உள்ள யானைகள் மிரண்டன. அவற்றை அதன்பாகன்கள் அசுவாசப்படுத்தினர். குதிரைகளும் மிரண்டன. அதன்பின்னர் 2–வது மற்றும் 3–வது முறை குண்டுகள் முழங்கப்பட்டபோது அவை சாதாரண நிலைக்கு வந்தன.
இதையடுத்து தசரா யானைகள், பீரங்கி குண்டு எந்திரம் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டன. அப்போது, அந்த யானைகள் வெடிமருந்து புகை வாசனையை சுவாசிக்கும்படி செய்யப்பட்டது. தசரா விழா தொடங்குவதற்குள் இன்னும் 4 முறை இதேபோன்று யானைகளுக்கு பீரங்கி குண்டுகள் முழங்கி பயிற்சி அளிக்கப்படும் என்று வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.இந்த பயிற்சியின்போது மைசூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுப்பிரமணீஸ்வரர் ராவ், துணை போலீஸ் கமிஷனர் விஷ்ணுவர்த்தன், கால்நடை மருத்துவர் நாகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். யானை–குதிரைகளுக்கு பீரங்கி குண்டுகள் முழங்க பயிற்சி அளிப்பதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.