தசரா திருவிழாவை முன்னிட்டு வேடம் அணியும் பக்தர்களுக்கான அலங்கார பொருட்கள் தயாரிக்கும் பணி மும்முரம்


தசரா திருவிழாவை முன்னிட்டு வேடம் அணியும் பக்தர்களுக்கான அலங்கார பொருட்கள் தயாரிக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 10 Sept 2017 3:00 AM IST (Updated: 9 Sept 2017 5:44 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு, வேடம் அணியும் பக்தர்களுக்கு தேவையான அலங்கார பொருட்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

உடன்குடி,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு, வேடம் அணியும் பக்தர்களுக்கு தேவையான அலங்கார பொருட்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தசரா திருவிழா

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, காணிக்கை வசூலித்து கோவிலில் செலுத்துவார்கள்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 21–ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10–ம் திருநாளான 30–ந்தேதி (சனிக்கிழமை) இரவில் சூரசம்ஹாரம் நடக்கிறது. தசரா திருவிழா கொடியேற்றம் நடந்ததும், பல்வேறு நாட்கள் விரதம் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சென்று காப்பு கட்டுவார்கள். பின்னர் அவர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, 10–ம் திருநாளில் கோவிலில் செலுத்துவார்கள்.

பல்வேறு வேடங்கள்

தசரா திருவிழாவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால், வேடம் அணியும் பக்தர்களுக்கு தேவையான அலங்கார பொருட்களை தயாரிக்கும் பணி உடன்குடி பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

காளி, அம்மன், லட்சுமி, சரசுவதி, பார்வதி, சிவபெருமான், விநாயகர், முருகர், கிருஷ்ணர், ராமர், பிரம்மன், இந்திரன், அனுமார், நாரதர், சுடலைமாடன் உள்ளிட்ட பல்வேறு சுவாமி வேடங்களையும், பஞ்ச பாண்டவர்கள், துரியோதனன், கர்ணன், ராவணன், முனிவர், ராஜா, ராணி, குறவன், குறத்தி, கரடி, புலி, கிளி, எலும்புக்கூடு, டாக்டர், போலீஸ், நர்சு, நாகரீக பெண் உள்ளிட்ட பல்வேறு வேடங்களையும் பக்தர்கள் அணிவார்கள்.

அலங்கார பொருட்கள்

காளி வேடம் அணியும் பக்தர்கள் 40 நாட்கள் கடும் விரதம் மேற்கொள்வார்கள். இதேபோன்று பல்வேறு வேடங்களை அணியும் பக்தர்களும் பல்வேறு நாட்கள் விரதம் மேற்கொள்வார்கள். வேடம் அணியும் பக்தர்களுக்கு தேவையான கிரீடம், தலைமுடி, கைகள், மார்பு கவசம், திரிசூலம், வாள், ஈட்டி, கண்மலர், ஒட்டியாணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விரதம் இருக்கும் பக்தர்கள், தங்களது உடல் அளவுக்கு ஏற்ப, அலங்கார பொருட்களை தயாரிக்குமாறு ஆர்டர் கொடுத்து செல்கின்றனர். இதனால் உடன்குடி பகுதிகளில் தசரா திருவிழா களைகட்ட தொடங்கி உள்ளது.


Next Story