வாடகை பாக்கி நிலுவை: மதுரை எஸ்.எஸ். காலனி போலீஸ் நிலையத்தை 3 மாதத்துக்குள் காலி செய்ய வேண்டும் போலீஸ் கமிஷனருக்கு கோர்ட்டு உத்தரவு
எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தை 3 மாதத்துக்குள் காலி செய்து கட்டிடத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனருக்கு மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் டி.எஸ்.ஜெய்னுதீன். இவர் மற்றும் இவரது சகோதரர்கள் டி.எஸ்.தாஜூல்அனார், சிராஜம்முனிரா ஆகியோர் கடந்த 2015–ம் ஆண்டு மதுரை மாவட்ட முன்சீப் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
எங்கள் தந்தை சிக்கந்தருக்கு சொந்தமான கட்டிடம் மதுரை எல்லீஸ்நகரில் உள்ளது. அந்த கட்டிடத்தை கடந்த 1983–ம் ஆண்டு என் தந்தை எஸ்.எஸ்.காலனி போலீஸ்நிலையம் செயல்படுவதற்காக வாடகைக்கு கொடுத்தார். 3 ஆண்டுக்கு ஒருமுறை வாடகையை உயர்த்துவது என்றும், ஆண்டுக்கு ஒரு முறை வாடகை ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொள்வது என்றும் என் தந்தைக்கும், மதுரை மாநகர போலீஸ் கமிஷனருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
கடந்த 2007–ம் ஆண்டு அந்த கட்டிடத்தை எங்களுக்கு நன்கொடையாக எங்கள் தந்தை கொடுத்தார். இதுகுறித்து போலீஸ் கமிஷனருக்கு நாங்கள் முறைப்படி தகவல் தெரிவித்தோம். பின்னர் 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த கட்டிடம் இடிந்து விழும்நிலையில் இருப்பதால், அங்கு பணியாற்றும் போலீசாருக்கும், தினசரி போலீஸ்நிலையம் வந்து செல்லும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கூறி கட்டிடத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் கேட்டுக்கொண்டோம்.
அதற்கு, எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தை புதிய கட்டிடத்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக 2010–ம் ஆண்டு கடிதம் மூலம் போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். ஆனால் தற்போது வரை புதிய கட்டிடத்துக்கு எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆண்டுக்கு ஒருமுறை வாடகை ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் இருந்து வரும்நிலையில் கடந்த 2014–ம் ஆண்டுக்கு பின்பு வாடகை ஒப்பந்தத்தை போலீஸ் கமிஷனர் புதுப்பிக்கவில்லை. 2005 முதல் 2010–ம் ஆண்டு வரை வாடகை உயர்த்தப்படவில்லை. இந்த ஆண்டுகளில் வழங்க வேண்டிய, உயர்த்தப்பட வேண்டிய வாடகை தொகையான 57 ஆயிரத்து 968 ரூபாயையும் தரவில்லை. இந்த தொகையை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும். போலீஸ் நிலையத்தில் இருந்து போலீசாரை வெளியேற்றிவிட்டு கட்டிடத்தை எங்களிடம் ஒப்படைக்க மதுரை மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மாவட்ட கூடுதல் முன்சீப் எஸ்.சப்னா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல் ஹாரூண்ரஷித் ஆஜரானார். விசாரணை முடிவில், எஸ்.எஸ்.காலனி போலீஸ்நிலையத்தை 3 மாதத்துக்குள் காலி செய்து, கட்டிடத்தை மனுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.