கூடலூரில் ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள் விற்பனையாளரை மாற்ற கோரிக்கை

விற்பனையாளரை மாற்ற கோரி கூடலூரில் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்,
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல்கூடலூர் ஓ.வி.எச். சாலையில் மகளிர் சுய உதவிக்குழு நடத்தும் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 450 குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கப்படுகிறது.
இந்த நிலையில் பொருட்கள் வாங்க கடைக்கு வரும் பொதுமக்களை விற்பனையாளர்ர் தரக்குறைவாக பேசுவதாக புகார் எழுந்தது. இதனால் கடை விற்பனையாளரை உடனடியாக மாற்ற வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை 10 மணிக்கு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ரேஷன் கடையை திடீரென முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த கூடலூர் வட்ட வழங்கல் அலுவலர் அப்துல் ரகுமான், போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் ஆனந்த் உள்ளிட்ட போலீசார் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளரை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட கடையின் விற்பனையாளரை மாற்றுவதாக வட்ட வழங்கல் அலுவலர் அப்துல் ரகுமான் உறுதி அளித்தார். மேலும் ரேஷன் கடைகளுக்கு அரிசி, சர்க்கரை தவிர பருப்பு, உளுந்து உள்ளிட்ட பொருட்கள் குறைவாகவே வழங்கப்படுகிறது என விளக்கம் அளித்தார். அதன் பின்னர் பொதுமக்கள் மதியம் 12.30 மணிக்கு தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இது குறித்து வட்ட வழங்கல் அலுவலர் அப்துல் ரகுமான் கூறும்போது, சம்பந்தப்பட்ட கடையின் விற்பனையாளர் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனால் அவருக்கு பதிலாக புதிதாக அன்னம்மா என்பவர் விற்பனையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அத்தியாவசிய பொருட்கள் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.