குடிமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் சாவு


குடிமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் சாவு
x
தினத்தந்தி 10 Sept 2017 4:15 AM IST (Updated: 10 Sept 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

குடிமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கோழி தீவன ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

குடிமங்கலம்,

உடுமலை அருகே உள்ள எரிசனம்பட்டியை சேர்ந்தவர் ஆறுச்சாமி(வயது 47). இவர் வரதராஜபுரம் அருகே உள்ள கோழி தீவனம் தயார் செய்யும் சுகுணா நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். இதுபோல் உடுமலை– பொள்ளாச்சி கெடிமேடு கூளநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (50). இவரும் அதே நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

நேற்று காலை 5.30 மணி அளவில் அந்த நிறுவனத்தில் இருந்து இருவரும், டீ குடிப்பதற்காக வரதராஜபுரத்துக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். குடிமங்கலம்–உடுமலை ரோட்டில் வரதராஜபுரம் அருகே சென்ற போது, குடிமங்கலத்தில் இருந்து உடுமலை நோக்கி வேகமாக வந்த ஒரு கார் இவர்களது மோட்டார்சைக்கிளின் பின்னால் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரும் தூக்கிவீசப்பட்டனர். இதனால் படுகாயம் அடைந்த ஆறுச்சாமியும், பழனிசாமியும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் மற்றும் குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் பழனிச்சாமி, ஆறுச்சாமியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். விபத்துக்கு காரணமான கார் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவரை தேடிவருகிறார்கள்.


Related Tags :
Next Story