மதுரை அருகே, கார்–மினி லாரி மோதல் 3 பெண்கள் உள்பட 4 பேர் பலி


மதுரை அருகே, கார்–மினி லாரி மோதல் 3 பெண்கள் உள்பட 4 பேர் பலி
x
தினத்தந்தி 9 Sep 2017 11:15 PM GMT (Updated: 9 Sep 2017 7:41 PM GMT)

மதுரை அருகே, காரும் மினி லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிர் இழந்தனர்.

பேரையூர்,

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த நூர்ஜஹான் (வயது55), கதிஜா(26), சஜீனா பிரோஸ்(24), பாத்திமா(21), ஆயிஷா(21) ஆகியோர் சொகுசு கார் ஒன்றில் மதுரையில் கண் பரிசோதனை செய்வதற்காக வந்தனர். காரை சஜீத் சலீம் என்பவர் ஓட்டிவந்தார். கார் மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியை அடுத்துள்ள எம்.சுப்புலாபுரம் கண்மாய் அருகில் வரும்போது சிலைமானிலிருந்து ராஜபாளையத்தை நோக்கி மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

இரண்டு வாகனங்களும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரிலிருந்த நூர்ஜஹான், கதிஜா, சஜீனா பிரோஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காரை ஓட்டி வந்த சஜீத் சலீம் பலத்த காயமடைந்து பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும்வழியில் இறந்துவிட்டார். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

தகவல் கிடைத்ததும், துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ், இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், டி.கல்லுப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பாத்திமா, ஆயிஷா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மினி லாரி டிரைவர் முத்தையாவும் பலத்த காயமடைந்த நிலையில் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

டி.கல்லுப்பட்டி போலீஸ் எல்லையில் திருமங்கலம்–கொல்லம் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் 20–க்கும் மேற்பட்ட அபாயகரமான வளைவுகள் உள்ளன. இதனால் வாரத்திற்கு குறைந்தது 3 விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த 5 வருடங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் இதே பகுதியில் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர்.

200க்கும் மேற்பட்ட விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால், இந்த சாலையினை சீர்படுத்த வேண்டுமென்று எத்தனயோ மனுக்கள் பொதுமக்களால் அனுப்பப்பட்டும் சாலை சீரமைக்கப்படவே இல்லை.

இதே சாலையில் தான் கடந்த வருடம் பஸ்சும், லாரியும் மோதிய விபரத்தில் 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story