கள்ளக்குறிச்சியில் ஆம்னி பஸ் மோதி பொறியியல் கல்லூரி மாணவர் பலி
கள்ளக்குறிச்சியில் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற பொறியியல் கல்லூரி மாணவரின் மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பஸ் மோதியதில், அவர் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி,
புதுச்சேரி மாநிலம் சேதரப்பட்டு முத்தமிழ்நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சரண்(வயது 20). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. 3–ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் மூலக்குளத்தை சேர்ந்த நாகராஜ் மகன் சூர்யா(19).
இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் ஊட்டிக்கு சுற்றுலா செல்வதாக தங்களது வீட்டில் கூறிவிட்டு சென்றனர். அப்போது கள்ளக்குறிச்சி அருகே புறவழிச்சாலையில் சேலம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் எதிரே சேலத்தில் இருந்து சென்னை நோக்கி ஆம்னி பஸ் ஒன்று வேகமாக வந்தது. இந்த பஸ் எதிர்பாராதவிதமாக சரண் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சரண் பரிதாபமாக உயிரிழந்தார். சூர்யாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்கள்.