பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரத்தில் மாற்று பாதையில் இயக்கம்
பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டது.
விழுப்புரம்,
கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக தினமும் சென்னை எழும்பூருக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தினமும் மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வந்தடையும்.
இந்த நிலையில் நேற்று தாம்பரம், பெருங்களத்தூர் இடையேயுள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இதனால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையம் வரை வந்து பின்னர் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் என்று ஏற்கனவே ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி நேற்று மாலை 5.30 மணியளவில் வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக செல்லும் திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு மார்க்கத்திற்கு பதிலாக திருக்கோவிலூர், திருவண்ணாமலை, காட்பாடி, அரக்கோணம் வழியாக சென்னை எழும்பூருக்கு இயக்கப்பட்டது.
இதன் காரணமாக இந்த ரெயிலில் வெளியூர்களில் இருந்து பயணம் செய்த திண்டிவனம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கும் செல்லும் பயணிகள் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். அதன் பிறகு விழுப்புரத்தில் இருந்து அரசு பஸ்கள் மூலம் அந்த பயணிகள் திண்டிவனம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மேலும் இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு செல்ல வேண்டிய பயணிகள் ரெயில் செங்கல்பட்டு ரெயில் நிலையத்துடன் ரத்து செய்யப்பட்டது.