டாக்டர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி மருத்துவமனை பணியாளர்கள் சாலை மறியல்


டாக்டர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி மருத்துவமனை பணியாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Sept 2017 4:30 AM IST (Updated: 10 Sept 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி மருத்துவமனை பணியாளர்கள் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குளித்தலை,

குளித்தலை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் பாண்டியன். இவர் நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது விபத்தில் காயமடைந்த வக்கீல் நீலமேகம் என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தார். அப்போது முதல்-உதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி செல்லும்படி அவரை டாக்டர் கூறினார். இதில் டாக்டர் பாண்டியனுக்கும், வக்கீல் நீலமேகம் மற்றும் அவருடன் வந்திருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் டாக்டர் பாண்டியனை வக்கீல் நீலமேகம் உள்பட சிலர் தாக்கியதாக கூறப்படு கிறது.

வழக்குப்பதிவு

இந்த நிலையில் டாக்டர் பாண்டியன் தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று முன்தினம் பணியில் இருந்த மற்ற டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் தங்கள் பணிகளை புறக்கணித்து அரசு மருத்துவமனையின் முன்பு திருச்சி- கரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து டாக்டர் பாண்டியன் அளித்த புகாரின் பேரில் நீலமேகம் உள்பட 10 பேர் மீதும், நீலமேகம் அளித்த புகாரின் பேரில் டாக்டர் பாண்டியன் மீதும் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் டாக்டர் பாண்டியன் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும் குளித்தலை அரசு மருத்துவமனையின் முன்பு டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் தங்கள் பணிகளை புறக்கணித்து நேற்று திருச்சி- கரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துகருப்பன், இன்ஸ்பெக்டர் ராஜமோகன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தங்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இங்கு இல்லை. இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் பலமுறை நிகழ்ந்துள்ளது. எனவே டாக்டர் பாண்டியனை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும். மேலும் குளித்தலை அரசு மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டுமென டாக்டர்கள் கூறினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், டாக்டர் பாண்டியனை தாக்கியவர்கள் குறித்து உரிய தகவல் கொடுத்தால் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட டாக்டர்கள் உள்ளிட்டோர் தங்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள கேமராவில் பதிவான வீடியோவை பார்த்து டாக்டரை தாக்கியவர்கள் யார்? யார்? என்று விசாரணை செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த மறியல் போராட்டத்தால் திருச்சி- கரூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

இதேபோல் டாக்டர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி கரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் பிரபாகர் தலைமை தாங்கினார். செயலாளர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். டாக்டர்கள் அரவிந்த், சிவராமன், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அரசு டாக்டர்கள் சங்கத்தினர், அரசு டாக்டர் மற்றும் பட்டமேற்படிப்பு டாக்டர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்திருந்தனர். தொடர்ந்து பணியில் இருந்த போதும் கருப்பு பட்டை அணிந்திருந்தனர். டாக்டரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளை (திங்கட்கிழமை) அடுத்த கட்டமாக போராட்டம் நடத்தப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர். 

Related Tags :
Next Story