5 மாதங்களில் ஓசிப்பயணம் செய்தவர்களிடம் ரூ.72 கோடி வசூல்


5 மாதங்களில் ஓசிப்பயணம் செய்தவர்களிடம் ரூ.72 கோடி வசூல்
x
தினத்தந்தி 10 Sept 2017 3:42 AM IST (Updated: 10 Sept 2017 3:42 AM IST)
t-max-icont-min-icon

ஓசிப்பயணம் செய்தவர்களிடம் கடந்த 5 மாதங்களில் ரூ.72 கோடியே 14 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரெயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.

மும்பை,

மும்பையில் மின்சார ரெயில்களில் தினமும் சுமார் 75 லட்சம் பேர் பயணம் செய்வதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதில் பயணிகள் உரிய டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதால் ரெயில்வே நிர்வாகத்திற்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே இதை தடுக்க ரெயில்வே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக காலை, மாலை நேரங்களில் ரெயில்நிலைய நடைமேம்பாலங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் மத்திய ரெயில்வேயில் உரிய டிக்கெட் இன்றி பயணம் செய்த சுமார் 2 லட்சம் பேர் பிடிபட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து அபராதமாக 8 கோடியே 99 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகடந்த 2016–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வசூலான தொகையை விட 26.18 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு ஆகஸ்டில் ரூ.7 கோடியே 12 லட்சம் வசூலாகி இருந்தது.

இதேபோல கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 5 மாதங்களில் உரிய டிக்கெட் இன்றி 14 லட்சம் பேர் பிடிபட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ. 72 கோடியே 14 லட்சம் வசூலிக்கப்பட்டது. இதே காலகட்டத்தில் 2016–ம் ஆண்டு 55 கோடியே 88 லட்சம் வசூலாகி இருந்தது. இந்த தகவலை மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.

Next Story