தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் திருமாவளவன் பேச்சு


தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் திருமாவளவன் பேச்சு
x
தினத்தந்தி 9 Sep 2017 11:15 PM GMT (Updated: 9 Sep 2017 10:47 PM GMT)

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.

மாமல்லபுரம்,

‘மண்மீட்பு போராட்டம் மற்றும் தொல்லியல் துறைக்கு எதிராக தலசயன பெருமாள் கோவில் மீட்பு போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பங்கு’ என்ற குறுந்தகடு வெளியீட்டு விழா மாமல்லபுரத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தொண்டரணி செயலாளர் வீ.கிட்டு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் வி.மாரி, லோகேஷ், சாலமன், கடம்பாடி ராஜ், உதயம்லோகு, இ.சி.ஆர்.அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் வினோத் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குறுந்தகட்டை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

கர்நாடகாவில் இந்துத்துவாவுக்கு எதிராக பேசக்கூடிய, எழுதக்கூடிய பெண் பத்திரிகையாளர் படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். மத்திய, மாநில அரசுகள் இந்த வன்செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தண்டிக்க வேண்டும்.

மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமே மத்திய, மாநில அரசுகள் தான். இனிமேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில் மத்திய அரசு தனி சட்டம் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திரைப்பட இயக்குநர் களஞ்சியம், கட்சியின் துணை பொதுச்செயலாளர் பாலாஜி, மாநில நிர்வாகிகள் வ.கனல்வழி, காஞ்சி மகேஷ், மீனா பழனிவேல், த.மா.கா. மாநில நிர்வாகி என்.ஜனார்த்தனம், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் வெ.விசுவநாதன், அ.தி.மு.க. நகர செயலாளர் ஏ.கணேசன், முன்னாள் கவுன்சிலர் மு.பாலுசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சசிகலா கிட்டு நன்றி கூறினார்.


Next Story