கவுரி லங்கேசுக்கு மாநில அரசு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை


கவுரி லங்கேசுக்கு மாநில அரசு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை
x
தினத்தந்தி 9 Sep 2017 11:40 PM GMT (Updated: 9 Sep 2017 11:40 PM GMT)

நக்சலைட்டுகளிடம் இருந்து மிரட்டல் வந்தாலும் கவுரி லங்கேசுக்கு மாநில அரசு எந்த பாதுகாப்பும் வழங்கவில்லை என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறினார்.

சிக்கமகளூரு,

சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வும், பா.ஜனதா மாநில செயலாளருமான சி.டி.ரவி நேற்று சிக்கமகளூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேசின் கொலைக்கு மாநில அரசே காரணம். கவுரி லங்கேஷ் நக்சலைட்டுகளின் மறுவாழ்வுக்காக பாடுபட்டு வந்தார். இதன்காரணமாக அவருக்கு நக்சலைட்டுகளிடம் இருந்து மிரட்டல் வந்தது. இருந்தாலும், மாநில அரசு அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை. கவுரி லங்கேசுக்கு மாநில அரசு உரிய பாதுகாப்பு அளித்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது.

கவுரி லங்கேசின் கொலைக்கு பா.ஜனதாவினரும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் தான் காரணம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். அதற்கு அவரிடம் என்ன ஆதாரம் உள்ளது. மாநிலத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களை குறிவைத்து கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது. அதற்கு எந்த கருத்தும் தெரிவிக்காத ராகுல் காந்தி, இதில் மட்டும் கருத்து தெரிவிப்பது ஏன்?.

கன்னட எழுத்தாளர் கலபுரகி கொலை செய்யப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. மாநிலத்தில் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. கர்நாடகத்தில் நடக்கும் கொலைகளுக்கு பொறுப்பேற்று மாநில அரசு பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story