ஆரணி அரசு டாக்டர், உதவியாளரை சென்னை போலீசார் அழைத்துச்சென்றனர்


ஆரணி அரசு டாக்டர், உதவியாளரை சென்னை போலீசார் அழைத்துச்சென்றனர்
x
தினத்தந்தி 10 Sep 2017 12:29 AM GMT (Updated: 10 Sep 2017 12:28 AM GMT)

சென்னை மாணவியை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஆரணி அரசு மருத்துவமனை டாக்டர் மற்றும் அவரது உதவியாளரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

ஆரணி,

சென்னை மாணவியை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஆரணி அரசு மருத்துவமனை டாக்டர் மற்றும் அவரது உதவியாளரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஆரணி அரசு மருத்துவமனையில் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் விசாரணை நடத்தினார்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் உள்ள வங்கியில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளியின் மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் மாயமானாள். ஓரிரு நாட்களுக்கு முன் வீடு திரும்பியபோது மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. அவளை அவளது தாயார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றார். அங்கு நடந்த பரிசோதனையில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து மாணவியிடம் விசாரித்தபோது ஆரணியில் உள்ள உறவினர் சித்ரா என்பவர் வீட்டுக்கு சென்றதாகவும், அவருடன் தொடர்பு வைத்த சுரேஷ் என்பவர் உதவியுடன் அவர் விபசாரத்தில் தள்ளப்பட்டது தெரியவந்தது. சுரேஷ் ஆரணி அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களை தனியார் வாகனங்களில் கொண்டு சென்று ஒப்படைக்கும் வேலை செய்து வருகிறார்.

அந்த மாணவியை ஆரணி அரசு மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராக பணியாற்றும் டாக்டர் ஜெயப்பிரகாஷ், வார்டு உதவியாளர் பாண்டியன் உள்பட சிலர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியதும் மாணவியின் உறவினர் சித்ரா, அவருடன் தொடர்பு வைத்திருந்த சுரேஷ் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இது குறித்து மாணவியின் தாய் சென்னை திருமங்கலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மல்லிகா வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க போலீசாருடன் ஆரணிக்கு விரைந்து வந்தார்.

ஆரணி அரசு மருத்துவமனைக்கு வந்த அவர்கள் டாக்டர் ஜெயப்பிரகாஷையும், வார்டு உதவியாளர் பாண்டியனையும் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தில் சித்ரா மற்றும் சுரேஷ் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் நவநீதம் தனலட்சுமி (பொறுப்பு) நேற்று ஆரணி அரசு மருத்துவமனைக்கு வந்தார். இங்கு அவர் டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் சென்னை போலீசார் பிடித்துச்சென்ற மயக்கவியல் நிபுணர் டாக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் உதவியாளர் பாண்டியன் ஆகியோரது நடத்தை குறித்தும் விசாரித்தார்.

இது குறித்து அறிக்கை தயார் செய்து கலெக்டருக்கு அனுப்பியுள்ளதாக நிருபர்களிடம் அவர் தெரிவித்தார்.


Next Story