உலக சாதனைபடைத்த ‘தமிழ் தாத்தா’ குறும்படம்


உலக சாதனைபடைத்த ‘தமிழ் தாத்தா’ குறும்படம்
x
தினத்தந்தி 10 Sept 2017 12:11 PM IST (Updated: 10 Sept 2017 12:11 PM IST)
t-max-icont-min-icon

வயது முதிர்ந்த பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி போன்றவர்களை பாரமாகக் கருதி, அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்க இடம் தேடி அலையும் இந்த உலகில்

யது முதிர்ந்த பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி போன்றவர்களை பாரமாகக் கருதி, அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்க இடம் தேடி அலையும் இந்த உலகில்- தாத்தாவின் மீது இருந்த பற்று பாசத்தை வெளிப்படுத்துவதற்காக ஒரு குறும்படத்தை இயக்கி, உலக சாதனைபடைத்திருக் கிறார், திருச்சியை சேர்ந்த ஆருத்ரா சரவணகுமார் என்ற இளைஞர். ‘93 நாட் அவுட்’ என்ற இந்த குறும்படம் 23 நிமிடங்கள் ஓடக்கூடியது. பொறியியல் பட்டதாரியான ஆருத்ரா சரவணகுமார் தனது தாத்தாவின் மீது வைத்திருந்த பாசத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த படத்தை இயக்கி உள்ளார்.

சினிமா பின்னணி எதுவும் இல்லாத இவர் இதுவரை எந்த திரைப்பட தொழில் நுட்பத்தையும் கற்றதில்லை. ஆனால் கலியபெருமாள் என்கிற பெயருடைய 93 வயது தாத்தாவை கதாநாயகனாக நடிக்க வைத்து பேரன் இயக்கிய இந்த குறும்படம் இதுவரை சர்வதேச அளவில் 7 விருதுகள் உள்பட மொத்தம் 75 விருதுகளை பெற்றுள்ளது. லட்சக்கணக்கில் பணத்தை கொட்டி எடுக்கப்படும் சினிமா படங்கள் கூட வெற்றிக்கோட்டை எட்டுமா? என்கிற நிலை உள்ள இந்த காலகட்டத்தில் ஆருத்ரா சரவண குமார் இயக்கிய குறும்படம் பெரிய படங்களுக்கே போட்டியாக திருச்சியில் உள்ள ஒரு தியேட்டரில் ஹவுஸ்புல் காட்சிகளாக டிக்கெட் கட்டணத்துடன் திரையிடப்பட்டு கூடுதலாக இன்னொரு சாதனையையும் படைத்துள்ளது. அடுத்து பல தியேட்டர்களில் வெளியிடப்பட இருக்கிறது.

குறும்படத்தின் கதை இதுதான்:

93 வயதான கலியபெருமாள் ஓய்வு பெற்ற தமிழாசிரியர். இளைஞராக இருந்த காலத்தில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு நாத்திகவாதியாக இருந்த கலியபெருமாள் பின்னர் ஆன்மிகத்தில் நம்பிக்கை கொள் கிறார். மனைவியை பிரிந்து மகனின் பராமரிப்பில் வசித்து வரும் அவர், தள்ளாத வயதிலும் நாள்தோறும் சைக்கிள் ஓட்டத் தவறுவது இல்லை.

அதிகாலை 5 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருந்த தாத்தா கலியபெருமாள் வானொலி பெட்டியில் ஒலித்த அறிவிப்பை கேட்டு ‘கடவுளைத் தேடி’ என்ற புத்தகத்தை வாங்குவதற்காக பழைய புத்தகங்கள் விற்பனை செய்யும் கடைக்கு செல் கிறார். பல நாட்கள் அலைந்தும் அவர் எதிர்பார்த்த குறைந்த விலையில் புத்தகம் அவருக்கு கிடைக்கவில்லை. தினமும் ரிஸ்க் எடுத்துக்கொண்டு அவர் புத்தகத்தை தேடி அலைவதால் உறவினர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிறார். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை.

இந்த நிலையில் அவர் பல நாட்கள் தேடி அலைந்த புத்தகத்தை அவரது பேத்தி கீழே கிடந்து எடுத்து கொடுக்கிறாள். புத்தகத்தை கையில் வாங்கி பார்க்கும் கலியபெருமாள், ‘அன்பு தான் கடவுள் இதனை புரிந்து கொள்ளாமல் நான் தேடி அலைந் திருக்கிறேன்’ என்று அவர் கூறுவதாக படம் முடிகிறது.

அன்புக்காக ஏங்கும் முதியோர்கள் இல்லந்தோறும் இருந்தாலும் அதனை குறும்படமாக ஆவணப்படுத்தி இருப்பது தான் ஹைலைட்ஸ். அதுவும் 93 வயதில் முதியவர் ஒருவர் நடித்து இருப்பது கூடுதல் சிறப்பு. இதற்காக அதிக வயதுள்ள அறிமுக நடிகர் என்ற சாதனைக்காக லிம்கா புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார், தாத்தா கலியபெருமாள்.

சர்வதேச அளவில் சாதனைகளை நிகழ்த்தியுள்ள இந்த படத்தின் இயக்குனர் ஆருத்ரா சரவணகுமார் சொல்கிறார்:

“எனது தாத்தா கலியபெருமாள் புத்தகப் பிரியர். கலை ஆர்வமும் கொண்டவர். அவர் தனது அறையில் சுமார் 20 ஆயிரம் புத்தகங்களை வைத்து இருந்தார். 93 வயதிலும் உடல் தளராது சைக்கிள் ஓட்டினார். அதை எல்லாம் ஆவணப்படுத்தி அவரை பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் இந்த குறும் படத்தை தயாரிக்க திட்டமிட்டேன். இதற்கு எனது மாமா 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கேமராவை எனக்கு பரிசாக அளித்தார். அந்த கேமரா மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் தான் தாத்தாவை பற்றிய குறும்படமாக உருவாகி உள்ளது.

சினிமா தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் எனக்கு முன் அனுபவம் இல்லை. முன்அனுபவத்திற்காக சென்னைக்கு சென்று சில இயக்குனர்களை சந்திக்க திட்டமிட்டேன். ஆனால் நான் திட்டமிட்ட இயக்குனர்களை பார்க்ககூட என்னால் முடியாததால் இருக்கும் இடத்தில் இருந்தே படத்தை இயக்க முயற்சித்தேன்.

கட்டிட காண்டிராக்டு பணியில் அப்பாவுக்கு உதவியாக இருந்த எனக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டுமே ஓய்வு நாள் என்பதால் 2015 ஜூன் மாதம் படப்பிடிப்பை தொடங்கினேன். தொடர்ச்சியாக மொத்தம் 52 ஞாயிற்றுக்கிழமைகளில் படப்பிடிப்பை முடித்தேன். படப்பிடிப்பு முழுவதும் முடிந்த பின்னர் அதன் டிரைலர் காட்சியை பார்த்த இயக்குனர் விஜய் மில்டன் என்னை பாராட்டினார். தான் இயக்கும் கோலிசோடா-2 படத்தில் என்னை உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்டார்.

படத்தை நான் ரிலீஸ் செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக உடல் நலக்குறைவினால் எனது தாத்தா கலியபெருமாள் இறந்து விட்டார். உலகம் முழுவதும் இந்த படத்திற்கு கிடைத்த ஆதரவு, விருதுகள் ஆகியவற்றை எனது தாத்தா உயிருடன் இருந்திருந்தால் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார். எனது படத்தை யூ-டியூப்பில் இதுவரை 1 லட்சம் பேர் பார்த்து ரசித்து உள்ளனர். இதுவரை இந்த படம் ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசையும் பெற்றுத் தந்துள்ளது. உலக அளவில் 22 நாடுகளில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் திரையிடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் 4 விருதுகளும், சுவிட்சர்லாந்தில் ஒரு விருதும், இங்கிலாந்தில் இரண்டு விருதும் பெற்றிருக்கிறது. இதுவரை 75 விருதுகள் கிடைத்துள்ளன. வெற்றிப்பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது..” என்றார்.

ஆருத்ரா சரவணகுமாரின் மனைவி சரண்யா. இவர்களுக்கு ஷமிஸ்கா தேவிஸ்ரீ என்ற மகள் உள்ளாள்.

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி ஆருத்ரா சரவணகுமார் இயக்கி உள்ள திரு கங்கை என்ற குறும்படம் சென்னையில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் கலைவிழாவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளது.

குறும்படங்கள் என்றாலே அவை விருதுகளுக்காக மட்டுமே எடுக்கப்படுபவை என்றிருந்த நிலையை மாற்றி, வணிக ரீதியாகவும் குறும்படங்களால் சாதிக்க முடியும், வசூலை எட்ட முடியும் என்ற ஒரு நிலையை ஏற்படுத்தி இருக்கிறது 93 நாட் அவுட். இதுபோன்ற இயக்குனர்கள் வளர்ந்தால் தமிழ் திரைப்பட உலகில் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் அதிகம் வருவதற்கான வாய்ப்பு உருவாகும்.

Next Story