தப்பி ஓடிய சாராய வியாபாரியை போலீசார் விரட்டிப்பிடித்தனர்


தப்பி ஓடிய சாராய வியாபாரியை போலீசார் விரட்டிப்பிடித்தனர்
x
தினத்தந்தி 10 Sep 2017 11:00 PM GMT (Updated: 10 Sep 2017 9:04 PM GMT)

கண்ணமங்கலம் அருகே சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே உள்ள மேல்நகர் காலனி மார்க்கபந்து மகன் சுதாகர் (வயது 36). இவர் மீது 5-க்கும் மேற்பட்ட சாராய வழக்குகள் உள்ளன. இதனால் அவர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.

ஜெயிலிலிருந்து வெளியே வந்த அவர் வீட்டில் வைத்து மீண்டும் சாராய வியாபாரம் செய்து வருவதாக கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் தலைமையிலான போலீசார் சுதாகர் வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது போலீசாரை கண்டதும் சுதாகர் தப்பி ஓடினார். அவரை போலீசார் விரட்டிச்சென்று கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் அவரது வீட்டில் இருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் சுதாகர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது மனைவி சங்கீதா மற்றும் உறவினர்கள் சுமார் 25 பேர் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சுதாகர் மனைவி சங்கீதா கூறுகையில், “எனது கணவர் சுதாகர் வீட்டில் இருந்தார். போலீசார் அவரை கைது செய்து அழைத்து வந்தனர். எதற்கு கைது செய்தனர் என போலீசார் கூற மறுக்கின்றனர்” என்றார்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனிடையே கண்ணமங்கலம் சந்தைமேடு பகுதியில் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது அங்கு அம்பேத்கர் நகரை சேர்ந்த மோகன் மகன் வெற்றி (வயது 24) என்பவர் சாராயம் விற்ற போது கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. 

Related Tags :
Next Story