ஆசிரியர்-அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம்


ஆசிரியர்-அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Sep 2017 11:00 PM GMT (Updated: 10 Sep 2017 9:04 PM GMT)

கரூரில் ஆசிரியர்- அரசு ஊழியர்கள் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

கரூர்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்- அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த 7-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய விடுமுறை நாட்களில் போராட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில் போராட்டம் தொடர்பாக ஆசிரியர்- அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் ஆலோசனை கூட்டம் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் குமாரவேல் தலைமை தாங்கினார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் வேலுமணி முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் கோரிக்கைகள் தொடர்பாக பேசினார்.

ஆர்ப்பாட்டம்

கூட்டத்தில் ஆசிரியர் சங்கத்தினர், அரசு ஊழியர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும், நாளை (செவ்வாய்க்கிழமை) கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டமும் நடைபெறும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது என்றனர்.


Next Story