நீல திமிங்கல விளையாட்டில் ஈடுபடுபவர்களை கண்டறிவது எப்படி? போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தகவல்


நீல திமிங்கல விளையாட்டில் ஈடுபடுபவர்களை கண்டறிவது எப்படி? போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தகவல்
x
தினத்தந்தி 12 Sept 2017 4:15 AM IST (Updated: 12 Sept 2017 1:21 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் நீல திமிங்கல விளையாட்டில் ஈடுபடுபவர்களை கண்டறிவது எப்படி? என்பது குறித்து விழிப்புணர்வு கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தகவல் தெரிவித்து உள்ளார்.

ஊட்டி,

நீல திமிங்கல விளையாட்டு மூலம் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய தற்கொலை எண்ணத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிச்சையப்பன் முன்னிலை வகித்தார். இதில் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமை தாங்கி பேசியதாவது:–

தமிழக அரசு உத்தரவின் படி, அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டக்கூடிய நீல திமிங்கல விளையாட்டு குறித்து அனைத்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு காவல்துறை மற்றும் கல்வித்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வின் மூலம் ஆசிரியர்கள் காவல்துறையோடு இணைந்து பணியாற்றுவதன் நீல திமிங்கல விளையாட்டினால் மாணவர்களுக்கு ஏற்படும் தற்கொலை எண்ணத்தை தடுக்க முடியும்.

10–ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்கள் தற்போது நவீன செல்போன்களை உபயோகித்து வருகிறார்கள். இந்த செல்போன்களில் நீல திமிங்கல விளையாட்டு செயலி உள்ளீடு செய்யப்படுகிறது. இதில் விளையாட ஆர்வம் காட்டும் மாணவர்களுக்கு படிப்பில் கவனம் குறைவதோடு, யாருடனும் சேராமல் தனிமையில் இருப்பார்கள். பெற்றோர்களுடன் சரிவர பேசாமல், அவர்களை கோபம் உண்டாக்கும் வகையில் செயல்படுவார்கள். இதற்கு காரணம் அந்த நீல திமிங்கல விளையாட்டு தான்.

அந்த விளையாட்டு மூலம் சிலர் தங்களது கைகளில் நீல திமிங்கல படத்தை வரைகின்றனர். ஒரு கட்டத்தில் மாடியில் இருந்து குதித்தல், ஆற்றில் குதித்தல் மற்றும் ரெயிலில் மோதி தற்கொலை செய்யவும் தூண்டும். தினமும் அதிகாலை 4.15 மணிக்கு செல்போனுக்கு ஒரு அழைப்பு வரும். அப்போது அவர்களை தனிமையில் போய் நீல திமிங்கல விளையாட்டு விளையாட சொல்லும். இதுபோன்ற மாற்றங்கள் ஏதேனும் மாணவர்கள் இடையே காணப்பட்டால், பெற்றோர்களிடம் சொல்வதுடன் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் நீல திமிங்கல விளையாட்டில் மாணவர்கள் ஈடுபடவில்லை என்று தான் நினைத்திருந்தோம். ஆனால், கூடலூர் பகுதியில் இந்த விளையாட்டில் 3 மாணவர்கள் ஈடுபட்டதை, ஆசிரியர்கள் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தி உள்ளனர். இதன் மூலம் 3 மாணவர்களை மீட்டு உள்ளோம். அந்த 3 மாணவர்களையும் தொடர்ந்து ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். இதில் ஈடுபடும் மாணவர்களுக்கு காவல்துறை மூலம் ஆலோசனை வழங்குவதுடன், அதற்கான தடுப்பு நடவடிக்கையும் எடுக்கப்படும். பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும்.

கல்லூரிகளில் மாணவர்கள் இடையே ராக்கிங் நடக்காதவாறு கல்லூரி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் 2011–ம் ஆண்டுக்கு பின்னர் ராக்கிங் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. இருந்தாலும், அந்தந்த பகுதிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் கல்லூரிகளில் தொடர்ந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்லூரிகளில் ராக்கிங் தொடர்பான புகார்களை தெரிவிக்க, புகார் பெட்டிகள் வைக்க வேண்டும். அதில் குறிப்பிட்டு இருக்கும் காவல்துறை அதிகாரி செல்போன் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம்.

கூடலூர் பகுதியில் பள்ளி, கல்லூரி அருகே குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் வருகிறது. குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள 11 இடங்களில் அந்தந்த பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் தங்களது படிப்பை பாதியிலேயே நிறுத்தினால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story