கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Sept 2017 4:30 AM IST (Updated: 12 Sept 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் 7-ந்தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி கடந்த 7-ந்தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, பேரணி, சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பின் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் இளையராஜா, ரெங்கசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஏராளமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட நிர்வாகிகள் இளையராஜா, கிட்டு, ரெங்கசாமி உள்பட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் போன்றவற்றை ஒழித்து முறையான காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குடைகளை பிடித்துக்கொண்டு பங்கேற்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நேற்று ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மொத்தம் 7 ஆயிரத்து 6 பேர் பணிக்கு வரவில்லை. தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்தம் 10 ஆயிரத்து 328 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 3 ஆயிரத்து 111 பேர் நேற்று பணிக்கு வரவில்லை. அரசு ஊழியர்கள் மொத்தம் 13 ஆயிரத்து 420 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 3 ஆயிரத்து 895 பேர் பணிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story