நாகர்கோவிலில் அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் மறியல்; 900 பேர் கைது


நாகர்கோவிலில் அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் மறியல்; 900 பேர் கைது
x
தினத்தந்தி 13 Sept 2017 4:30 AM IST (Updated: 12 Sept 2017 10:25 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் சாலைமறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 900 பேரை போலீசார் கைது செய்தனர். அடுத்தக்கட்ட போராட்டமாக இன்று (புதன்கிழமை) கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர்.

நாகர்கோவில்,

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.

வேலை நிறுத்தம் செய்யும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் பகுதியில் நேற்றும் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கரன் தலைமையில் நாகர்கோவில் டவுன் துணை சூப்பிரண்டு கோபி உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக கலெக்டர் அலுவலகம் முன் குவிக்கப்பட்டிருந்தனர்.

மறியல் போராட்டத்துக்கு, ஜாக்டோ–ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன், கனகராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். பகவதியப்பபிள்ளை, லீடன்ஸ்டோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் குமாரவேலு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி வினித் உள்பட பலர்பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து அனைவரும் கலெக்டர் அலுவலக சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். வெயில் அதிகமாக இருந்ததால் பெண் ஊழியர்கள் குடை பிடித்தபடி போராட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்தனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சாலைமறியலில் ஈடுபட்டதாக 475 பெண்கள் உள்பட 900 பேரை கைது செய்து ராமன்புதூரில் உள்ள ஒரு பள்ளிக்கூட கலையரங்கில் தங்கவைத்தனர்.

ஆசிரியர்களின் இந்த திடீர் சாலைமறியலால், கலெக்டர் அலுவலக பகுதி வழியாக வந்த வாகனங்கள் மாற்றுபாதையில் திருப்பி விடப்பட்டன. 20 நிமிட நேரத்துக்கு பின்பு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

முன்னதாக, அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் குமாரவேலு நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7–ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுவோரின் உணர்வுகளை புரிந்துகொண்டு பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல், அவர்களை நீதித்துறையின் மூலமாக தமிழக அரசு மிரட்டி வருகிறது. தமிழகம் முழுவதும் நடைபெறும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தின் வீரியத்தினை உணர்ந்து கொண்டு ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி, சுமுக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், சென்னை கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். நாளை (அதாவது இன்று) நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story