மாணவி அனிதா தற்கொலை விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும்


மாணவி அனிதா தற்கொலை விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும்
x
தினத்தந்தி 13 Sept 2017 2:15 AM IST (Updated: 13 Sept 2017 12:27 AM IST)
t-max-icont-min-icon

மாணவி அனிதா தற்கொலை விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என இல.கணேசன் எம்.பி. கூறினார்.

கோவில்பட்டி,

மாணவி அனிதா தற்கொலை விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என இல.கணேசன் எம்.பி. கூறினார்.

இல.கணேசன் எம்.பி. பேட்டி

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்.பி. நேற்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:–

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் முறையாக, அமைதியாக நடந்து முடிந்து, தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா நியமித்த டி.டி.வி.தினகரன் நியமனம், பொதுக்குழு உறுப்பினர்களை நியமித்தது, நீக்கியது செல்லாது எனவும், ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமியும், கட்சிக்கு ஓ.பன்னீர்செல்வமும் என்ற முடிவு வரவேற்கத்தக்கதாகும்.

ஒரு கட்சியில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை பயன்படுத்தி புறவாசல் வழியாக ஆட்சிக்கு வருவதை பாரதீய ஜனதா கட்சி என்றுமே விரும்புவதில்லை. எங்கள் கட்சியின் சாதனைகளை, அரசின் சாதனைகளை மக்களிடம் பிரசாரம் செய்து தேர்தலில் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதே பா.ஜனதாவின் விருப்பம்.

சி.பி.ஐ. விசாரணை வேண்டும்

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவி அனிதா தற்கொலை விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். அவரது தற்கொலையை தூண்டி விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனிதா தற்கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை தமிழக அரசு கவுரவ பிரச்சினையாக பார்க்காமல் மாணவர்களுக்கு மொழி கற்றுக் கொடுக்க உதவ வேண்டும். இதன் மூலம் குறைந்த செலவில் தரமான கல்வி கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story