ஊட்டி, கூடலூர், பந்தலூரில் வேலை நிறுத்த போராட்டம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 735 பேர் கைது


ஊட்டி, கூடலூர், பந்தலூரில் வேலை நிறுத்த போராட்டம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 735 பேர் கைது
x
தினத்தந்தி 13 Sept 2017 4:30 AM IST (Updated: 13 Sept 2017 12:54 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி, கூடலூர், பந்தலூரில் வேலை நிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 735 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊட்டி,

7–வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் (ஜாக்டோ–ஜியோ) கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று 4–வது நாளாக நீலகிரி மாவட்ட ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் மாவட்டம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆஸ்ரா தலைமை தாங்கினார்.

இதில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்பட அனைத்து துறைகளை சேர்ந்த 300–க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். இதில், குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய தாலுகாக்களில் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

அவர்கள் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு நின்றிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 120 பெண்கள் உள்பட 360 பேரை கைது செய்தனர்.

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள 336 அரசு தொடக்க பள்ளிகள், 94 அரசு நடுநிலைப்பள்ளிகள், 67 உயர்நிலைப்பள்ளிகள், 53 மேல்நிலை பள்ளிகளிலும் நேற்று பள்ளி மாணவ–மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு, பகுதிநேர ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர்கள் மற்றும் போராட்டத்தில் கலந்துகொள்ளாத ஆசிரியர்கள் மூலம் நடத்தப்பட்டது. இதனால் காலாண்டு தேர்வு நடத்தும் பணியில் பாதிப்பு ஏற்படவில்லை.

அதே கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் பெரும்பாலானோர் வேலைக்கு செல்ல வில்லை. அவர்கள், கூடலூர் தாலுகா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதில் மாவட்ட தொடர்பாளர் அன்பழகன், ஜான்மனோகர்ராஜ், சங்கர், ரவிக்குமார், சமுத்திரபாண்டியன் உள்பட 375 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் கொண்டு தங்க வைத்தனர். அங்கு போதிய இடவசதி இல்லாததால் கைதானவர்களை தனியார் பஸ்களில் ஏற்றி தனியார் பள்ளிக்கூடத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களுக்கு மதியம் உணவு வழங்கப்பட்டது.

இது குறித்து போராட்ட குழுவை சேர்ந்த நிர்வாகிகள் கூறும்போது, எங்களுடைய கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும். இல்லை என்றால் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்றனர். வேலை நிறுத்தம் காரணமாக கூடலூர் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி, கூடலூர், பந்தலூரில் வேலை நிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மொத்தம் 735 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story