அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை வசூலிக்கக்கோரி சிதம்பரம் மருத்துவ மாணவர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டி போராட்டம்


அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை வசூலிக்கக்கோரி சிதம்பரம் மருத்துவ மாணவர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டி போராட்டம்
x
தினத்தந்தி 13 Sept 2017 5:00 AM IST (Updated: 13 Sept 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை வசூலிக்கக்கோரி சிதம்பரத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்களது கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம்,

சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி செயல்படுகிறது. அரசால் கையகப்படுத்தப்பட்ட இந்த கல்லூரியில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை வசூலிக்க வேண்டும், ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30–ந் தேதி முதல் சிதம்பரத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தினமும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பலவித போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் கடலூரில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு, கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

இந்த மாணவர்களின் போராட்டம் நேற்று 14–வது நாளாக நீடித்தது. இதையொட்டி, மருத்துவ கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்று திரண்டு ஊர்வலமாக புறப்பட்டு பல் மருத்துவ கல்லூரியின் நுழைவு வாயில் முன்பு வந்தனர். பின்னர், வகுப்புகளை புறக்கணித்து மாணவ–மாணவிகள் தங்களது கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை வசூலிக்கக்கோரி கோ‌ஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து, அங்கிருந்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் புறப்பட்டு, கல்லூரி டீன் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story