கர்நாடகத்தை காங்கிரஸ் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் பா.ஜனதா நிர்வாகிகளுக்கு எடியூரப்பா வேண்டுகோள்
கர்நாடகத்தை காங்கிரஸ் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று பா.ஜனதா நிர்வாகிகளுக்கு எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தை காங்கிரஸ் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று பா.ஜனதா நிர்வாகிகளுக்கு எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீங்கள் பாடுபட வேண்டும்கர்நாடக பா.ஜனதா கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், ஈசுவரப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:–
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பா.ஜனதாவுக்கு குறைந்தது 100 ஓட்டுகள் கிடைக்குமாறு நிர்வாகிகள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நமது கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அறிவுறுத்தி இருக்கிறார். அதன்படி நீங்கள் பணியாற்ற வேண்டும். பா.ஜனதா ஆலமரத்தை போன்றது. ஆலமரத்தின் பலம் இருப்பது வேர்களில் தான். அதே போல் நமது கட்சியில் உள்ள அடிமட்ட தொண்டர்கள் தான் நமது பலம். கர்நாடகத்தை காங்கிரஸ் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும். இதற்காக நீங்கள் பாடுபட வேண்டும். இது பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் நோக்கம் ஆகும். இந்த நோக்கத்தை நாம் நிறைவேற்ற வேண்டும்.
ஆதாரங்களை வெளியிடுவேன்கர்நாடகத்தில் சித்தராமையா அரசு பல்வேறு ஊழல்களை செய்துள்ளது. சித்தராமையா மற்றும் மந்திரிகளின் ஊழல்கள் குறித்து இன்னும் சில நாட்களில் ஆதாரங்களை வெளியிடுவேன். சித்தராமையாவின் குடும்ப உறுப்பினர்களும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து முழு விவரங்கள் அடங்கிய மனு ஒன்றை கவர்னரிடம் வழங்க உள்ளேன்.
நமது பிரதமர் மோடியின் பிறந்த நாளான வருகிற 17–ந் தேதி உங்கள் பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களின் சிலைகளை தூய்மைப்படுத்த வேண்டும். ஆஸ்பத்திரிகளுக்கு சென்று நோயாளிகளுக்கு பழங்கள் வழங்க வேண்டும். பிரதமரின் பிறந்த நாளை நாம் அர்த்தப்பூர்வமாக கொண்டாட வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.