நாமக்கல்லில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சாலைமறியல் 630 பேர் கைது


நாமக்கல்லில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சாலைமறியல் 630 பேர் கைது
x
தினத்தந்தி 12 Sep 2017 11:00 PM GMT (Updated: 12 Sep 2017 8:29 PM GMT)

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 630 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 8-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருபிரிவினர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இவர்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்றும் நீடித்தது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் நேற்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என மொத்தம் 1,112 பேர் வேலைக்கு வரவில்லை. மொத்தம் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு என்பதால், வழக்கமான பணிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதற்கிடையே கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்ததால், நேற்று காலை முதலே ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அங்கு கூட தொடங்கினர். காலை 11 மணி அளவில் அவர்கள் நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சாலையில் அமர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் கைது செய்ய முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சாலைமறியல் போராட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார். பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். இதில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.

பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை போலீசார் கைது செய்து தனியார் கல்லூரி பஸ்களில் ஏற்றி, திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். இதில் 365 பெண்கள் உள்பட மொத்தம் 630 பேர் கைது செய்யப்பட்டனர். 

Related Tags :
Next Story