மதுகுடிக்க பணம் கேட்டு தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்த மகன்


மதுகுடிக்க பணம் கேட்டு தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்த மகன்
x
தினத்தந்தி 13 Sept 2017 4:45 AM IST (Updated: 13 Sept 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிமடம் அருகே மதுகுடிக்க பணம் கேட்டு தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை அரிவாளால் வெட்டி மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சூரக்குழி ரோட்டுத்தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 52). கூலித்தொழிலாளி. இவருக்கு சரோஜா (42) என்ற மனைவியும், இந்திரன் (23), ரஞ்சித் (20) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் கூலி வேலை செய்துவருகின்றனர். நாகராஜன் தினமும் மது குடித்து விட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகராஜன், சரோஜாவிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்தார். அப்போது அங்கிருந்த இளைய மகன் ரஞ்சித், தாயிடம் ஏன் தகராறில் ஈடுபடுகிறீர்கள்? என கூறி தந்தையை தட்டிக்கேட்டார். இதனால் தந்தை, மகனுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

அப்போது நாகராஜன்,ரஞ்சித்தை தகாத வார்த்தையால் திட்டி தாக்கினார். இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித், அருகில் இருந்த அரிவாளை எடுத்து நாகராஜன் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த நாகராஜன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அப்போது ரஞ்சித் அங்கிருந்து ஓடிவிட்டார். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகராஜனை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக இறந்தார். மேலும் இதுகுறித்து நாகராஜனின் உறவினர் தனபால் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை தேடி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story