காத்திருப்பு போராட்டத்திற்கு பெட்டி படுக்கையுடன் மாட்டு வண்டியில் வந்த ஜாக்டோ–ஜியோ அமைப்பினர்


காத்திருப்பு போராட்டத்திற்கு பெட்டி படுக்கையுடன் மாட்டு வண்டியில் வந்த ஜாக்டோ–ஜியோ அமைப்பினர்
x
தினத்தந்தி 13 Sep 2017 10:45 PM GMT (Updated: 2017-09-13T22:59:40+05:30)

கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்காக பெட்டி படுக்கையுடன் மாட்டு வண்டியில் வந்தனர்.

சிவகங்கை,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ–ஜியோ அமைப்பின் சார்பில் தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைந்து புதிய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

 அதன்படி முதற்கட்டமாக கடந்த 12–ந்தேதி ஆர்ப்பாட்டமும், நேற்று முன்தினம் 2–ம் கட்டமாக மறியல் போராட்டமும் நடைபெற்றது. இதேபோல் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று 3–ம் கட்டமாக சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். முன்னதாக காத்திருப்பு போராட்டத்திற்கு வந்த ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் பெட்டி படுக்கையுடன் மாட்டு வண்டியில் வந்தனர். மேலும் அவர்கள் சமையல் பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்திருந்தனர்.

 இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள இடத்தில் பந்தல் அமைத்து போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், இளங்கோ, தமிழரசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்த போராட்டத்தில் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி இரவு–பகலாக காத்திருந்து போராட்டம் நடத்தப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


Next Story