பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம்–டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் மோதல் உருவ பொம்மை எரிக்க முயன்ற 15 பேர் கைது
பெரியகுளத்தில், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டி.டிவி.தினகரன் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தின் உருவபொம்மையை எரிக்க முயன்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம்
சென்னையில் நடத்தப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் பகுதியில் நேற்று டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் திரண்டனர்.
பின்னர் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் தென்கரை மூன்றாந்தல் பகுதிக்கு சென்ற அவர்கள், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் உருவ பொம்மையையும் எரிக்க முயன்றனர். இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் உருவபொம்மையை எரிக்கவிடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த தென்கரை போலீசார் விரைந்து சென்று மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் உருவபொம்மையை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் எரிக்க முயல்வதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து உருவபொம்மையை எரிக்க முயன்றதாக 15 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை பெரியகுளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.