தினக்கூலியாக ரூ.350 வழங்க கோரி டேன்டீ தொழிலாளர்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்
தினக்கூலியாக ரூ.350 வழங்க கோரி கொளப்பள்ளி டேன்டீ தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பந்தலூர்,
அரசு தேயிலை தோட்ட கழகத்தில் (டேன்டீ) பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.231 வழங்கப்படுகிறது. இது தற்போதை விலைவாசிக்கு ஏற்ப இல்லை என தொழிலாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.350 வழங்க வேண்டும் என வலியுறுத்தி பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.2–ல் டேன்டீ அலுவலகம் முன்பு நேற்று காலை 7 மணிக்கு கொட்டும் மழையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பி.டயுள்.யூ.சி. தொழிற்சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்ட தொழிலாளர்கள் கோஷமிட்டனர். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் வேலைக்கு சென்றனர். தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது மழை பெய்தது. அவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை மற்றும்பிளாஸ்டிக் பைகளை போர்த்தியபடி நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இது குறித்து பி.டபுள்.யூ.சி. தொழிற்சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:–
டேன்டீ தொழிலாளர்களுக்கு தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுவது இல்லை. இதனால் அவர்கள் குடும்ப செலவுகளை கூட சமாளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக குழந்தைகளுக்கு தரமான கல்வி கூட கொடுக்க முடியவில்லை. எனவே தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.350 வழங்க வேண்டும்.
2014–ம் ஆண்டில் இருந்து சம்பளத்துடன் கூடிய விடுப்பு, மருத்துவ விடுப்பு பணத்தை உடனடியாக வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை இதுவரை வழங்கப்பட வில்லை. தோட்ட தொழிலாளர் குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து கிடக்கிறது. இதை சீரமைக்க வேண்டும். குடியிருப்புகளை ஒட்டி கழிப்பறைகள் அமைத்து கொடுக்க வேண்டும். டேன்டீ தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், தெருவிளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.